யாழ்ப்பாணத்தில் ஐந்து பெண்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 1.9 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஐந்து பெண்கள் கைது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.அரியநாயகம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் வெளிநாட்டிற்கு செல்வதற்காக தென்னிலங்கை பகுதியிலுள்ள முகவர் நிறுவனம் ஒன்றின் மூலம் நுழைவு விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
விசா பெறுவதற்கு வங்கி கணக்கில் 2 மில்லியன் ரூபா பணம் வைப்பில் இருக்க வேண்டும் என முகவர் நிறுவனம் கூறியுள்ளது. அதற்கமைவாக 2 மில்லியன் ரூபாய் பணத்தை குறித்த நபர் வங்கி கணக்கில் வைப்பு செய்துள்ளார்.
இந்நிலையில், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை வெளிநாட்டு தூரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி, குறித்த முகவர் நிறுவனம் அவற்றை பெற்றுக்கொண்டுள்ளது.
எனினும், சில நாட்களின் பின்னர் குறித்த நபர் தனது வங்கிக் கணக்கினை சோதனை செய்து பார்த்த போது, வைப்பிலிடப்பட்ட பணத்திலிருந்து 1.9 மில்லின் ரூபாய் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார், முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த முகவர் நிறுவனத்தில் பணியாற்றிய 5 பெண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன் போது மூன்று பெண்கள் சாட்சியால் அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில், குறித்த ஐந்து பெண்களையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.