வடகொரியாவை சமாளிக்க உறுதியான ராஜதந்திரம் தேவை

பிரதமர் ஷின்சோ அபே

ஜப்பான் தேர்தலில், வெற்றி தெளிவாக உள்ள நிலையில், வடகொரியாவுடனான விவகாரத்தை `உறுதியாக கையாளுவேன்` என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

நாடு சந்திக்க கூடிய பல `நெருக்கடிகளை` சமாளிக்க, தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தலை ஓராண்டு முன்னதாகவே நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

இதில், வடகொரியாவின் அச்சுறுத்தலும் ஒன்று.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் , அபே மூன்றில் இருபங்கு ஓட்டுகளை தன்வசப்படுத்தி, `அதீத பெரும்பானமையுடனே` இருப்பதாக தெரிவிக்கின்றன.

ஜப்பானின் போருக்கு பிந்தய சமாதான சட்டத்தை மாற்றியமைக்க அவருக்கு இது தேவை. இந்த சட்டம் 1947ஆம் ஆண்டு, ஜப்பானை ஆண்ட அமெரிக்கர்களால் கொண்டுவரப்பட்டது.இதில் 9ஆம் பிரிவு, போரை துறக்கவேண்டும் என கூறுகிறது.

அந்த சட்டத்தின் கீழ் இயங்கிவரும் ஜப்பான், தங்களின் ராணுவம் பாதுகாப்பிற்காகவே என்கிறது. ஆனால், இந்த சட்டத்தை மாற்றியமைக்கும் தனது விருப்பத்தை அபே முன்பே தெளிவுபடுத்திவிட்டார்.

இந்த பணிக்காக, `தன்னால் இயன்ற அளவிலான மக்களின் ஆதரவை பெறுவேன்` என்று கூறியுள்ளார்.

கருத்துக்கணிப்பிற்கு பிறகு அவர் பேசிய போது, `நான் தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, வடகொரியாவுடனான பிரச்சனையை உறுதியாக சந்திப்பதே என் தலையாய பணியாக இருக்கும். ஆனால் அதற்கு உறுதியான ராஜதந்திரம் தேவைப்படுகிறது` என்றார்.

கடந்த சில மாதங்களில், ஜப்பானின் வடக்கு பகுதியான ஹுக்காய்டோ பகுதியின் மேல், வடகொரியா இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இந்த தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம், அடுத்த ஆண்டு, தனது கட்சியான எல்.டி.பி கட்சியின் தலைவராக தொடர அபேவிற்கு வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, ஜப்பானில் அதிககாலம் பணியில் இருந்த பிரதமர் என்ற பெயரையும் அவர் பெறலாம்.