யாழில் மீண்டும் துப்பாகிக் கலாசாரம் துளிர்விட ஆரம்பிக்கின்றதா என்ற ஐயத்திற்கிடமான கேள்வியினைத் தோற்றுவித்திருக்கின்றன அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்.
போர் நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகளிடையே, கடந்த ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்மீது மீண்டும் ஆரம்பித்த துப்பாக்கிக் கலாசாரம் நேற்றைய சம்பவத்தில் வந்து நிற்கின்றது. இனி யார் என்ற கேள்விதான் இப்பொழுது மக்கள் மத்தியிலிருக்கும் மிகப்பெரிய கேள்வி.
அதைவிட போர் ஓய்ந்தபின் அண்மைய ஆண்டுகளை விட இந்த ஆண்டில் மிக நெருக்கமான வாள்வெட்டுச் சம்பவங்கள். இன்னார் இனியார் என்றல்லாமல் வீதியில் செல்வோர் எல்லார்மீதும் இந்த படுபாதகச் செயல் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இதுவரை உரிய தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. வாள் வெட்டுச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் அண்மையில் பலரைக் கைது செய்திருந்த நிலையிலும் குறித்த சம்பவங்கள் இடைவிடாமல் தொடர்ந்தவண்ணம்தான் உள்ளன.
அண்மையில்கூட நவராத்திரியின் ஆயுத பூசையன்று வாள் வெட்டுக் குழு ஒன்று தமது ஆயுதங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதைப் போன்று சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களைப் பிரசுரித்திருந்தது.
இதை எல்லாம் யார் செய்கிறார்கள்? உண்மையில் இவற்றிற்குப் பின்னால் எல்லாம் எந்த இயந்திரம் இருந்து செயற்படுத்துகின்றது? சமூகப் பிறழ்வுள்ள இளைஞர்கள்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்பது நம்பக்கூடிய கதையாகவா இருக்கின்றது?
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் குறிப்பாக கடந்த 2006, 2007, 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டின் காரணமாக யாழ்ப்பாணத்தில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் பிணமாக்கப்பட்டிருந்தார்கள். அதன் பின்னால் எல்லாம் அமைப்பு ரீதியிலான இயந்திரங்கள் நின்று செயற்பட்டுள்ளன என்பது மக்களுக்கு வெளிச்சம்.
இந்த நிலையில் கடந்த ஓராண்டு காலத்துக்குள் நடந்த வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூடு என்பன சாதாரணமானவையல்ல. இவை போர் ஓய்ந்து முன்னைய ஆண்டுகளைவிட மிக மோசமானதும் மிக நெருக்கமானதுமான சம்பவங்களாகும்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ இளங்செழியன் அவர்கள் பொலிஸாருக்கு வழங்கியிருந்த இறுக்கமான உத்தரவுகள் இதுவரையில் எவ்வாறான செயற்பாங்கில் உள்ளது என்பது மூடுபனி நிலையாகும்.
சம்பவங்களுடன் தொடர்புடைய பலரைக் கைதுசெய்துள்ளதாகச் சொல்கிறார்கள், ஆனால் குறித்த சம்பவங்கள் இடையறாது நடந்துகொண்டுதானே இருக்கின்றன? அவ்வாறாயின் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர்கள் யார்? வெளியிலிருந்து வெட்டும் செயலை இடையறாது மேற்கொள்ளும் இளைஞர்கள் யார்?
நேற்றைய சம்பவம் தவிர்ந்த கடந்த ஓராண்டுக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அனைத்திலும் பொலிஸாரின் துப்பாக்கிகளே பிரயோகிக்கப்பட்டுள்ளன. அதிலும் நீதிபதி இளஞ்செழியன்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தவிர்ந்த ஏனையவை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டவையே.
இந்த நிலையில் நேற்றைய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி யாருடையது என்பது இந்தப் பத்தி எழுதப்படும் இதுவரையான நேரம்வரை சூனியமே. போர் ஓய்ந்தபின்னர் விடுதலைப் புலிகளினது ஆயுதங்களும் மௌனிக்கப்பட்டதோடு துணை இராணுவக் குழுக்களின் ஆயுதங்களும் ஓரளவு ஓய்வுக்கு வந்தன. இல்லை என்றும் சொல்லலாம்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார்? நாட்டிலிருந்த துணை இராணுவக் குழுக்களிடமிருந்து முற்றாகவே ஆயுதங்கள் களையப்பட்டுவிட்ட நிலையில் நேற்றைய சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி யாருடையது? வடக்கில் பொலிஸார், அதிரடிப்படை, இராணுவம், கடற்படை, வான்படை போன்ற ஆயுதப்படைகளைவிட வேறு யாரேனும் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா? அதுவும் போர் நடந்து இத்தனை ஆண்டுகளின்பின்னர் அவை வெளிப்படவேண்டிய தேவை என்ன?
இதுகுறித்த கேள்விகளுக்கு நாட்டின் நீதித்துறை உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சியில் சன நாயகம் உயர்ந்தபட்சமாக மதிக்கப்படுகின்றது என சர்வதேசம் சொல்லிவரும் இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் விசனத்தை மட்டுமல்ல எதிர்காலம் குறித்த பயம் மிக்க சூழ்நிலையினையும் தோற்றுவித்துள்ளது என்றுதான் சொல்லமுடியும்!