ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பு, ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
ராஜகிரிய கலபளுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினாலே 83 வயதான குறித்த பெண்மணி பலியாகியுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த மேற்படி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்மணி வசிக்கும் குறித்த வீட்டில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதன்போது அவரது உள நலன் பாதிக்கப்பட்ட மகளும் இருந்துள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. எவ்வாராயினும் 52 வயதான குறித்த உளநலன் பாதிக்கப்பட்ட மகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணம் தெரியவரவில்லையாயினும் அதனை அறிவதற்கான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளதாக வெலிகடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.