நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக பிரதேச சபைகள் உருவாக்கப்படுவதற்கு வித்திட்டது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் இன்னும் மூன்று நாட்களில் ஆதாரங்களுடன் அவற்றை வெளிப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் 1998ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் சௌமிய மூர்த்தி தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் முன்வைத்த கோரிக்கைக்கு மறைந்த அமைச்சர் ரேணுகா ஹேரத் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுவரெலியா – டயகம கிழக்கு 3ஆம் பிரிவு தோட்டத்தில் அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தை பிரதேச மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் இழுத்தடிப்பிற்கு மத்தியில் காணப்பட்ட நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை விரிவாக்குவது தொடர்பிலான திட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கருத்துகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.