யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் மர்மநபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயம் அடைந்த நபர், சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலகத்தை உறவினர்களிடம் கையளிக்கும் போது அதனை ஏற்க மறுத்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களை கைது செய்யும் வரை சடலத்தை ஏற்றுக்கொள்ள போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இந்த அனர்த்தத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் இரண்டு பேர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்துள்ள தகவல் ஊடாக விரைவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.தற்போது சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞன் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்றும் அவரை ஏற்கனவே பொலிஸார் தேடி வந்தததாகவும் அரியாலை மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 3 மணியளவில் வீதியில் சென்ற இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.
இதேவேளை குறித்த இளைஞனை பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று நேற்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.