யாழ்ப்பாணம் சுன்னாகம் சேச்சடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து-உந்துருளி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அளவெட்டி செல்லும் தனியார் பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் உந்துருளியில் பயணித்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோது 23 வயதான குறித்த மகன் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த தந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் பலியான இளைஞர் கண்டியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கிப் படிப்பதாகவும் அவரைப் பார்வையிடுவதற்காக தந்தை யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் உந்துருளியில் சுன்னாகம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஒன்று விதியை மீறி இவர்களை மோதியதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலம் தற்பொழுது யாழ்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.