”மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரைச் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பா.ஜ.க தலைமை நூலகத்தின் நிர்வாகியும் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினருமான ஆசிர்வாதம் ஆச்சாரி வலியுறுத்தி உள்ளார்.
மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி குறித்து விஜய் பேசும் வசனம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மேலும், தொல்.திருமாவளவனை தமிழிசைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். இந்தநிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் பா.ஜ.க-வை விமர்சித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பா.ஜ.க தலைவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு, பா.ஜ.க தலைமை நூலகத்தின் நிர்வாகியும் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு உறுப்பினருமான ஆசிர்வாதம் ஆச்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆசிர்வாதம் ஆச்சாரி தனது முகநூல் பக்கத்தில், ”தமிழக பா.ஜ.க தலைவர்கள் முன்னெடுத்து வரும் பொதுப் பிரச்னைகளுக்கு தக்க பதிலளிக்க இயலாத கோழைகள் சிலர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரை விக்கிப்பீடியா போன்ற சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இக்கோழைகளின் இத்தகையச் செயல்களைத் தடுக்கும் விதமாக இவர்கள்மீது Information Technology Act, 2000-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.