விடுதலைப் புலிகளின் வாகனத் தொழிநுட்பம்; தற்பொழுது ஸ்ரீலங்கா பேருந்துகளில்…!

ஸ்ரீலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புகைச்சல்!

போர் இடம்பெற்ற காலத்தில் வாகனங்களை இயக்குவதற்கு விடுதலைப் புலிகள் கையாண்ட வழிமுறை ஒன்று தற்பொழுது மீண்டும் கையாளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக யுத்தகாலத்தில் இடம்பெற்றதைப் போன்று தற்பொழுது பெரும்பாலான பேருந்துகள் மண்ணெண்ணெயில் பயணிப்பதாக ஸ்ரீலங்காவின் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் சில பேருந்துகள் டீசலுக்கு பதிலீடாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்திவருவதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் வாகனத் தொழிநுட்பம்; தற்பொழுது ஸ்ரீலங்கா பேருந்துகளில்...!

இதுகுறித்து ஸ்ரீலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபன விசாரணைக் குழு விசாரணை ஒன்றினை மேற்கொண்டிருந்தது. இதன்போதே இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்படி, பேருந்து உரிமையாளர்கள் டீசலுக்கு பதிலீடாக தற்பொழுது மண்ணெண்ணெயையும் கலந்து இயக்குவதற்கு அதிக நாட்டம் காண்பித்து வருகின்றனர். இதற்கென வாகன இயந்திரங்களில் சிறியதொரு மாற்றம் செய்வதற்கு குறைந்த தொகைச் செலவே ஏற்படுகின்றது. இதன்மூலம் குறித்த பேருந்து உரிமையாளர்கள் அதிக இலாபமீட்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் மண்ணெண்ணெயின் விலை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சாரம் இல்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கும் இரவில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களுக்கும் நன்மை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பினைப் பயன்படுத்தியே பேருந்து உரிமையாளர்கள் அதிக இலாபத்தினையீட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டீசலுக்குப் பதிலாக இவ்வாறு மண்ணெண்ணெயை பயன்படுத்தி பேருந்து செலுத்துவதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பேருந்துகளில் டீசலுக்கு பதிலீடாக மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் போர் இடம்பெற்ற காலத்தில்கூட வடக்கு கிழக்கில் இவ்வாறான முறை பின்பற்றப்பட்டுவந்துள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் வடக்கு கிழக்கில் யுத்தம் நிகழ்ந்தபோது ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் வாகன இயந்திரத்தில் சிறிய ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியபின் மண்ணெண்ணெயில் அவற்றை இயக்கியிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.