இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்தும் பூர்வீக நிலத்தை மீட்பதற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் மக்களின் போராட்டம் இன்றுடன் 238 நாட்களை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவின் பூர்வீக நிலத்தின் ஒரு பகுதியான புலவுக்குடியிருப்பு நிலத்தை தொடர் போராட்டத்தின் மூலம் பெற்று புலவுக்குடியிருப்பு மக்கள் சொந்த நிலத்தில் கால்பதித்த அன்றைய தினம் கேப்பாபுலவு மக்கள் சொந்த நிலத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மழை மற்றும் வெயிலுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் ஒன்பது மாதங்களை எட்டவுள்ளது.
எனினும் மக்களின் போராட்டத்திற்கு இதுவரை தீர்வுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறே குறித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
சொந்த காணிகளின்றி மாதிரிக்கிராமங்களில் வசித்து வரும் மக்கள் அடிப்படை வசதிகளின்றி கடந்த எட்டு ஆண்டுகளாக வசித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மக்கள் முன்னெடுத்தபோதும், போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு போராட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன.
இவ்வாறான சூழலில் தான் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.