ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் தரப்பினரும் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வாறு குண்டுத் தாக்குதல் நடத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்கும்போது அதனை மேற்கொள்ளுமாறு இடதுசாரி கேந்திர நிலையத்தின் ஏற்பாட்டாளரான சமீர பெரேரா நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மொழி பெயர்க்கப்பட்ட எழுத்துக்கள் என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள சம்தத்தத்வ ஜயந்தி பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நூலின் முதற்பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வழங்கிவைத்தார்.
அதன் பின்னர் உரையாற்றிய அவர், மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் அதனை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் மீது குண்டுத் தாக்குதலையும் நடத்த தயங்கப்போவதில்லை என்று பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இந்தக் கருத்துக்கு பலதரப்பினரும் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்ற நிலையில் கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணைப்பாளர் சமீர பெரேரா இதுதொடர்பில் கருத்து வெளியிட்டார்.
“புதிய அரசியலமைப்பு நிறைவேற்ற கொண்டுவந்தால் அதனை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு நாடாளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தவும் தயாரென விமல் வீரவன்ச நேற்றைய தினம் கூறியிருந்ததை கண்டேன். விமல் வீரவன்ச கடந்தகாலங்களில் 88,89களில் செய்த பழக்கங்களையே இப்போது கூறியிருக்கின்றார். அப்போது நாடாளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் நடத்தியது விமல் வீரவன்சவின் மைத்துனராவார். 89களில் தனது மைத்துனர் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைத்தால் 2017ஆம் ஆண்டில் இவர் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்த தயாராகின்றார். இரு மைத்துனரும் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் செய்வாராகில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் அனைவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அந்தத் தாக்குதலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். அப்போதுதான் இந்த நாட்டிற்கு தேவையற்றவர்கள், இந்நாட்டின் திருட்டுக் கும்பல் அழிந்துவிடும். விமல் வீரவன்ச நாட்டின் ஜனநாயகத்தை எதிர்க்கின்றனவர். அவருக்கு அரசியலமைப்பு, நீதிமன்றம், நாடாளுமன்றம் தேவையற்றது. அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தால் பழைய இடத்திற்கே அது திரும்பும் என்பதுபோல விமல் வீரவன்சவுக்கு பழக்கமுள்ள அரசியல் கலாசாரத்திற்கே செல்வதற்கு விரும்புகிறார். நாடாளுமன்றத்திற்கு வந்து ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அவர் எதிர்பார்க்கவில்லை. மாறாக மகாராஜாவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்து அவருக்கு மசாஜ் செய்து, அவருக்கு கீழே விழுகின்ற உணவுகளை சாப்பிட்டு, திருட்டுக்கு அனுமதி வாங்குவதற்காகவே துடிக்கின்றார். எனவே அவருக்கு இப்படிப்பட்ட அரசியலமைப்பு எல்லாம் அநாவசியமற்றது” என்றார்.