இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின்போது புதைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்களைத் தேடி அகழ்வுப் பணியொன்று ஆரம்பமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுடியிருப்பு, அம்பலவன் பொக்கணைப் பகுதியிலேயே குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்த குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் பாரிய ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவருவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்றும் கிடைத்துள்ளதாக நம்பப்படுகின்றது.
இதன்படி குறித்த பகுதியில் அகழ்வுப்பணி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வருகை தந்துள்ளதை தொடர்ந்து இந்த அகழ்வு பணி ஆரம்பமாகியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வன்னியின் மறைவான ஒரு பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் படி அகழ்வுப் பணியினை மேற்கொண்டிருந்த பாதுகாப்புத் தரப்பினர் வெறும் தகரப் பீப்பாய் ஒன்றினை மீட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.