தனியார் வைத்தியசாலையில் கண் சத்திரச்சிகிச்சை செய்தவர்களுக்கு புதியவகை கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.
அந்தக் கிருமி தொடர்பான மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பான பரிசோதனையின் நிறைவிலேயே அந்தக் கிருமித் தொற்றுத் தொடர்பில் முழு விளக்கம் வரும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட கிருமி தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் 2 பெண்களும் எமது வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் வவுனியாவில் இருந்து சிகிச்சைக்காக வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். கிருமி தொற்று தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் பிரிவு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
அதன் மாதிரிகளை கொழும்புக்கு சிறப்புப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.
தொற்றுக்கான காரணம் பரிசோதனை முடிவின் பின்னரே தெரிய வரும்.
தற்போது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு போதியளவான சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்துவிடுவார்கள் என நம்புகின்றோம்’ என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி; மேலும் தெரிவித்தார்.