சுவிஸில் வன்முறையில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின், மரண சடங்கில் கலந்து கொள்ள வந்த குடும்பத்தினர் தலைமறைவு?!… (நடந்தது என்ன?)
சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து சென்ற உயிரிழந்தவரின் மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள், அவரது தம்பி ஆகியோர் சுவிஸ் அரச அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக தெரிய வருகின்றது.
கிளிநொச்சியை சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியன் கரன் என்ற இளைஞன், வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரின் இறுதிக்கிரியை நிகழ்வில் பங்கேற்பதற்காக கரனின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரன் சுவிஸ் நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கான உதவிகளை (விசா மற்றும் பயணச்சீட்டுக்கள், தங்குமிட வசதி, வாகன உதவிகளை) சுவிஸ் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
“தலைமறைவு”…
கடந்த இருபதாம் திகதி நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கு, முடிவுற்ற பின்னர் இன்று பிற்பகல் (ஐந்து நாள் விசா காலாவதியாகிய நிலையில்) அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையில், அவர்கள் தங்கி இருந்த இடத்துக்கு சுவிஸ் அரச அதிகாரிகள் சென்ற போது, அவர்கள் அங்கு இருக்கவில்லை எனவும், தலைமறைவாகி விட்டதாகவும் தெரிய வருகின்றது.
“உதவி செய்தது யார்?”….
மேற்படி குடும்பத்தினர் சுவிஸ் வந்த போது, இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் சுவிஸ் சட்டத்தரணியான திரு.ரஜீவ் லிங்கநாதன், தூண் மாநில அரசியல் பிரமுகரான திருமதி. தர்சிகா கிர்ஷானந்தன், தூண் மாநில பிரமுகரான திரு.சுப்பையா வடிவேலு, லுகானோ மாநில பிரமுகரான விசுவலிங்கம் ஈஸ்வரதாஸ் உட்பட பலரும் உதவி செய்து உள்ளதுடன், இவர்களுக்கான உதவிகளை புரியும்படி சுவிஸ் அரச அதிகாரிகளும், இவர்களிடம் கோரி இருந்தனர்.
“வன்முறையின் மறுவடிவம்”..
சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்திலுள்ள அகதிகள் இடைத்தங்கல் முகாமொன்றில் திரு.கரன் தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு அகதிகளுக்கு இடையில் முறுகல்நிலை வன்முறையாக மாறியது.
திரு.கரன் அங்கிருந்த அகதிகளை கத்தியால் தாக்க முற்பட்டதாகவும், அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் டிசினோ மாகாண பொலிஸார் கூறியுள்ளனர்.
இவர் ஏற்க்கனவே மூன்று முறைக்கு மேலாக, அந்த அகதி முகாமில் உள்ள தமிழர்களுடன் மோதலில் ஈடுபட்டு, கத்தியினால் தாக்க முற்படடதாகவும் தெரிய வருகின்றது.
“மரண சடங்குக்கு வந்தவர்கள் யார்?”..
கடந்த இருபதாம் திகதி நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதுக்காக மனிதாபிமான ரீதியில் சுவிஸ் அரசினால் அனுமதியும், உதவியும் வழங்கப்பட்டு மேற்படி கரனின் மனைவியான திருமதி கரன் விஜிதா, மகள்களான செல்வி கரன் தர்ஷினி, செல்வி.கரன் தர்சிகா, அவரது தம்பியான திரு.சுப்பிரமணியம் மதனகுமார் ஆகியோர் சுவிஸ் வந்து, தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
“இதன் பின்னணி யார்?”…
இலங்கையில் இருந்து வந்த மேற்படி குடும்ப உறவுகளுக்கு, சுவிஸ் அரச அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க உதவி வந்தவர்களை, “அல்லேலூயா” எனும் அமைப்பை சேர்ந்த திரு.அன்ரனி என்பவரே, மேற்படி தமிழ் சட்டத்தரணி உட்பட அனைவரையும் ஒதுங்குமாறு கூறி, சுவிஸில் உள்ள துருக்கி நாட்டை சேர்ந்த சட்டத்தரணி ஊடாக இவர்களை தலைமறைவாக்கி உள்ளதாகவும், இதுகுறித்து சுவிஸ் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதுகுறித்து மேற்படி திரு.அன்ரனி என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது “தமக்கு எதுவுமே தெரியாது எனவும், தான் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி” எமது தொடர்புகளைத் துண்டித்தார்.
“அஸ்தியையும் எடுக்காமல் தலைமறைவு”…
இன்றையதினம் அமரர் கரனின் அஸ்தியையும் பெற்றுக் கொண்டு, மாலை ஆறு மணிக்கு மீண்டும் இலங்கை செல்ல வேண்டிய இவர்கள், மேற்படி அஸ்தியையும் கைவிட்டு தலைமறைவாகி உள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைமறைவாக உள்ள இவர்கள் சட்டத்தரணி ஊடாக சுவிஸில் “அரசியல் தஞ்சம்” கோர உள்ளதாகத் தெரிய வருகின்றது.
“அரசியல் தஞ்சம் சாத்தியமா?”…
எனினும் மேற்படி தலைமறைவாக உள்ள குடும்பத்தினர் கோர உள்ள அரசியல் தஞ்சம் சாத்தியமா? என்பதே பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது.
ஏனெனில் மேற்படி குடும்பத்தினர் சுவிஸ் புறப்பட முதலே, “மேற்படிக் குடும்பத்தினரின் முழுமையான விபரங்கள், கைரேகை, முக்கிய ஆவணங்கள்” யாவும், இலங்கையில் இருந்து சுவிஸ் வரமுதலே, சுவிஸ் பொலிஸார் கைப்பற்றி உள்ள நிலையில்; மேற்படிக் குடும்பத்தினர் சுவிஸில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடெங்கும் “அரசியல் தஞ்சம்” கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வழக்கு விசாரணையில் நடந்தது என்ன??
வன்முறையில் ஈடுபட முயன்ற போது, சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட திரு.சுப்ரமணியம் கரன் அவர்களின் வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனைவிக்கு செலவுக்கென ஆயிரம் சுவிஸ் பிராங்கும் (சுமார் ஒரு இலட்ச்சத்து ஐம்பதினாயிரம் ரூபா), சகோதரருக்கு செலவுக்கென ஐந்நூறு சுவிஸ் பிராங்கும் (எழுபத்தையாயிரம் ரூபா) வழங்கப்பட்ட்துடன், “நீங்கள் சுவிஸில் தங்கும் விடயத்தில் நீதிமன்றம் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது எனவும், ஆயினும் வழக்கு பிரச்சினையில் நியாயமான தீர்வு வருமெனவும்” நீதிபதி குறிப்பிட்டதாகவும் தெரிய வருகிறது.
பலரும் உதவி புரிந்து, விழி பிதுங்கி உள்ளனர்…
மரண நிகழ்வு நடைபெற்ற போது, மனிதாபிமான ரீதியில் பல தமிழர்கள் இணைந்து, மேற்படி கரனின் குடும்பத்தினருக்கு சுமார் இரண்டாயிரம் பிராங்குக்கு (சுமார் மூன்று இலட்ச்சத்துக்கு மேலாக) மொத்தமாக வழங்கி உள்ளனர்.
இதை தவிர சிலர் தனிப்பட்ட ரீதியிலும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் சட்டத்துக்கு மாறாக தலைமறைவாகி உள்ள விடயம் சுவிஸில் உள்ள தமிழர்களிடையே அதிருப்தியையும், மனவருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் மேற்படி குடும்பத்தினர் சட்ட விரோதமாக நடந்த விடயம், எதிர்காலத்தில் ஏனைய தமிழர்களுக்கு “ஸ்பான்சர்” வழங்கும் விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிய வருகிறது.
“மரண சடங்கில் கலந்து கொள்ள வந்த குடும்பத்தினரின் உண்மையான நோக்கம் என்ன?”..
அமரர் கரனின் மரண சடங்கில் கலந்து கொள்ள வந்த குடும்பத்தினரின் உண்மையான நோக்கம் என்ன? என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதெனத் தெரிய வருகின்றது.
ஏனெனில் மேற்படிக் குடும்பத்தினர், குறிப்பாக மனைவியான திருமதி.கரன், விமான நிலையத்தில் வந்து இறங்கியது முதல், டிசினோ மாநிலம் (மரண சடங்கு நடைபெற்ற இடம்) வரை மட்டுமல்லாது, மரண வீட்டிலும் “நாம் எப்படி திரும்பி சென்று வாழ முடியும்?, வன்னியில் வாழ முடியாது” எனும் கோசத்தையே மீண்டும், மீண்டும் சொல்லி ஒப்பாரி வைத்ததாக தெரிய வருகிறது.
“நடக்கப் போவது என்ன?”….
சுவிஸ் பொலிஸாரோ, சுவிஸ் அரச அதிகாரிகளோ பலாத்காரமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுத்து இவர்களை வெளியேற்றாத போதிலும் இவர்கள் சுவிஸில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடெங்கும் அரசியல் தஞ்சம் கோர முடியாத இறுக்கமான சூழ்நிலை உள்ளதினால், இவர்கள் தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டு உள்ளதாக தெரிவிக்கும் பலரும், இவர்கள் சுவிஸில் உள்ள தமிழருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர்.