மத்திய வங்கியின் செப்டம்பர் மாத பணவீக்கம் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களுக்கமைய நாட்டில் பொருட்கள் மற்றும் சேவையின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான முதல் 8 மாதங்களில், இலங்கையின் பணவீக்கம் 43.4 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக, 1500.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
அதேபோன்று, இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2152.8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதிக்கான செலவு மாத்திரம் 110.9 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அனல் மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக அதிகளவான எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் இறுதி பெறுபேறாக இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவௌி அதிகரித்துள்ளதுடன், அது நாட்டின் மொத்த பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட பணவீக்கம் 8.6 வீதமாகும் என மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.
மேலும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் 4.2 ஆக காணப்பட்ட பணவீக்கம் ஜனவரி மாதத்திலிருந்து உயர்வடைந்துள்ளது எனவும், மார்ச் மாத முடிவில் 8.6 வீதமாக அதிகரித்த பணவீக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் மீண்டும் 6.3 வீதமாகக் குறைவடைந்தது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கடந்த இரு மாதங்களில் பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
கடந்த மாதத்தில் பணவீக்கம் அதிகரித்ததுடன் உணவுப்பொருட்கள் பலவற்றின் விலையும் அதிகரித்தன.
தேங்காய், அரிசி, பெரிய வெங்காயம், சீனி போன்ற பொருட்களின் விலையும் இந்த காலப்பகுதியில் அதிகரித்தது.
இதனைத்தவிர, எரிவாயு, ஆடை மற்றும் வீட்டு உபகரணங்களின் விலைகளும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.