ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சானா இக்பால் 31. பிரபல தன்னம்பிக்கை பயிற்சியாளரான இவர் ”பிரச்னைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல” என்ற கருத்தை வலியுறுத்தி, இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சென்று இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இவரது கணவர் அப்துல் நதீம்.
நேற்று சானா இக்பாலும், அப்துல் நதீமும் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கணவர் நதீம் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஐதராபாத் புறநகரான நரசிங்கி என்ற பகுதியில் உள்ள காளிமந்திர், லாங்கர் நெடுஞ்சாலை அருகே கார் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த சானா இக்பால் சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்துல் நதீம் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கூறுகையில் காரை அசுர வேகத்தில் ஓட்டிச் சென்றதாலே விபத்து நேரிட்டதாக தெரிவித்தனர். மேலும் விபத்தை குறித்து விசாரணை நடந்து வருகிறது. பலபேரின் உயிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவந்த சானா இக்பால் இறப்பு, மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.