வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள், ஏனைய விபரங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு அரசாங்கத்தால் அரிய சந்தர்ப்பமொன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தள மொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
”வரவு, செலவுத்திட்ட வாக்குறுதிகள் – நாடாளுமன்றத்திற்கு அப்பால்” எனும் கருப்பொருளில் http://www.budgetpromises.org/ எனும் பெயரில் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வெரிடே ரிசர்வ் நிறுவனத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த இணையத்தளத்தின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று கொழும்பில் இலங்கை பத்திரிகை மன்றத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் முன்மொழிவுகள், அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செயற்திட்டங்களுக்கான நிதியொதுக்கீடுகளின் செலவு விபரங்கள், ஒவ்வொரு செயற்திட்டத்தினதும் செயற்பாட்டு நிலை மற்றும் வெற்றியா தோல்வியா போன்ற விபரங்கள் உள்ளிட்ட ஏராளம் விடயங்கள் இந்த இணையத்தளத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்த இணையத்தளம் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பமானது வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் தௌவினை ஏற்படுத்தி தரும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.