சந்தேக நபர்களை பிணையில் எடுத்துவிடும் சட்டத்தரணிகளுக்கு நீதிபதி முன்வைத்த பதில்!

யாழ் குடாநாட்டில் அதிகரித்து வரும் வாள் வெட்டு கலாச்சாரத்தில் பொலிஸாரின் பங்கு அதிகளவில் காணப்படுவதாக சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசடி வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு யாழ் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் கோரப்பட்டது.
அதன்போதே சில சட்டத்தரணிகள் மேற்குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

625.117.560.350.160.300.053.800.210.160.90-130அரசடிப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் புகுந்து கடை உரிமையாளரை வெட்டியதோடு, பின்னர் கடையை பெற்றோல் குண்டு வீசி தாக்கிச் சென்ற சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞனை பொலிஸார் கொழும்பில் கைது செய்திருந்தனர். அந்த இளைஞர் மீது 5 வழக்குகள் பதிவு செய்த பொலிஸார் அதில் கைக்குண்டு வைத்திருந்ததாகவும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்குக்கு பிணை விண்ணப்பம் செய்த சட்டத்தரணி மன்றில் தெரிவிக்கையில், ”சட்டம் ஒருவரை திருத்துவதற்கு பயன்பட வேண்டும், ஆனால் ஒருவரை மன உழைச்சலுக்கோ குற்றம் செய்ய தூண்டுவதற்கோ பயன்படக் கூடாது. பொலிஸார் இளைஞர்களைக் குற்றம் செய்யத் தூண்டும் அளவு செயற்பாடுகளை செய்கிறார்கள். மன்று அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு வழக்குக்கு கைது செய்து விட்டு பல வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள். இது இளைஞர்களை விரக்திக்கு உட்படுத்துகிறது.” என தெரிவித்தார்.

அதே நேரம் மேலும் ஒரு சட்டத்தரணி எழுந்து மன்றில் தெரிவிக்கையில்,

“சந்தேக நபர்களுடனும் குற்றம் செய்தவர்களுடனும் பொலிஸார் நண்பர்களாக சுற்றி திரிகிறார்கள். பொலிஸார் உண்மையான பல குற்றவாளிகளை ஒழித்தும் வைத்துள்ளார்கள். இது தொடர்பாக நீதவான் நீதிமன்றில் முறையிட்டுள்ளோம். பொலிஸார் மத்தியில் சமூகத்துக்கு மதிப்பு வர வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மதிப்பை இழக்கச் செய்கின்றன. இல்லாத குழுக்களை உருவாக்கி அவர்களை பெரிய கதாநாயகர்கள் ஆக்கி குற்றச்செயல்களுக்கு தூண்டுகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நீதிபதி,

”தண்டனைகள் அதிகரித்தால் மட்டுமே குற்றச்செயல் குறைவடையும். தற்போது நீதிமன்றங்கள் மேல் அச்சம் குறைந்துள்ளது. இதை முடிவுக்கு கொண்டுவர தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். சட்டத்தரணிகளும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். கைது செய்பவர்களை பிணையில் எடுத்து விட்டால் குற்றங்கள் குறையாது அதிகரித்து தான் செல்லும்” என தெரிவித்தார்.

சந்தேக நபர்களை பிணையில் எடுத்துவிடும் சட்டத்தரணிகளுக்கு நீதிபதி முன்வைத்த பதில்!