புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வணபிதா எஸ். ஜே. இம்மானுவல் அடிகளாரை நம்பி நல்லா மோசம்போய்விட்டார்கள்.
பரலோகத்திலிருக்கும் யேசுதான் உங்களை காப்பாற்றுவார் என சொல்லிவிட்டு, நம்பியிருந்த எல்லோரையும் கைகழுவிவிட்டு, யாருக்கும் தெரியாமல் இலங்கை சென்ற பாதர் சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்ததால் என்னசெய்வது என புலம்பெயர் தமிழா்கள் திகைத்து நிற்கிறார்கள்.
• பேஸ்புக்கில் பாதர் இமானுவேலை திட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் கொண்டு வரும் உப்பு சப்பில்லா தீர்வை புலம்பெயர் தமிழர்கள் குழப்ப கூடாது என பாதர் அறிக்கைவிடுத்துள்ளார்.
• வணபிதா எஸ். ஜே. இம்மானுவேலுக்கு துரோகி என ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.
ஒட்டு மொத்த தமிழர்களையும் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் சிலுவையில் அறைகின்றார்-ஈழத்தமிழர் மக்களவை
சுமார் 15 வரையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு கூட்டாக செயற்பட்டுவந்த உலக தமிழர் பேரவை தற்போது ஒரு சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் சில வல்லரசு நாடுகளின் கைக்கூலியாக செயற்பட்டுவருவதாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஈழத்தமிழர் மக்களவை உலக தமிழர் பேரவையின் தலைவர் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் அண்மையில் இலங்கை சென்று சிங்கள தலைவர்களுடன் மேற்கொண்டுள்ள சந்திப்புக்களையும் கண்டித்துள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டபோது என்ன செய்வதென்று தெரியாது தமிழினமே நிராதரவாக நின்ற நேரத்தில் எமது விடுதலை வேட்கையை வென்றெடுக்க உருவானது தான் உலகத்தமிழர் பேரவை.
2009ம் ஆண்டு 8ம் திகதி ஆவணிமாதம் பாரிஸ் நகரில் ஐந்து கண்டங்களிலும் இருந்து வந்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்டது தான் உலகத்தமிழர் பேரவை.
15 நாட்டுப் புலம்பெயர் தமிழர்களால் எமது தேசியப் போராட்டத்தைத் தெடர்ந்து போராடவென இறுக்கமான முடிவுடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு.
உலகத் தமிழர் பேரவை உருவாக்கத்தின் போது ஒன்று கூடி இருந்த அனைவராலும் முக்கியமாக கருத்திலும் எழுத்திலும் இந்த அமைப்பின் உருவாக்கத்தில் ” இழந்த தமிழர் இறைமையை வென்றெடுப்பது, தமிழ் மக்களின் கடல் – நில எல்லைகளை பாதுகாப்பது” என்ற சிந்தனையுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று ஒரு சில வல்லரசுக்களின் கைக்கூலிகளாகி இன்று ஒரு சிலரால் கொண்டு நடத்தப்படுகிறது.
எஸ். ஜே. இமானுவெலின் தலைமையில் இயங்கி வந்த உலகத்தமிழர் பேரவை 2010ம் ஆண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Robert O’Blake உடன் திரு.சுரேன் சுரேந்திரன், மதகுரு இமானுவெல், திரு.எலியாஸ் ஜெயராஜ் மற்றும் திருமதி. புஸ்பராணி ஆகியோர் ஒரு சந்திப்பொன்றை ஏற்படுத்துகின்றனர்.
இச்சந்திப்பிற்குப் பின் உலகத்தமிழர் பேரவையில் அங்கம் வகித்த அத்தனை அமைப்புக்களும் தூக்கி எறியப்படுகின்றன. இவ்வமைப்பு மதகுரு உட்பட ஒரு சில தனிநபர்களின் கட்டுப்பாட்டில் இன்று இயங்கி வருகின்றது.
தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அருகிதையை இவ்வமைப்பு இழந்து நிறுவனமயப்படுத்துப் படுகின்றது. மேய்ப்பவராக இருந்த மதகுரு மேய்க்கப்படுபவராக மாறுகின்றார்.
COIN(Counterinsurgency) வியூக அடிப்படையில் இலங்கைத்தீவில் பொருளாதார நலன் சார்ந்த சர்வதேசத்தின் சூழ்ச்சி அரசியலை நகர்த்த வேண்டுமானால் அரசுகளுக்கு எதிரான மாற்றுக்கொள்கை உடைய அரசியற்கட்சிகள், அமைப்புக்களைப் புறந்தள்ளி அரச ஆதரவான கட்டமைப்புக்களை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை சர்வதேசத்திற்குத் அவசியம்.
அந்த வலைக்குள் நின்றுதான் பாதிரியாரின் தலைமையில் உள்ள GTF போன்ற அமைப்புக்கள் வல்லரசுகளுக்கும், இந்தியாவிற்கும், இலங்கை அரசிற்கும் ஊதுகுழலாக இயங்குகின்றது.
சிறிலங்கா அரசின் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்திய ஒற்றையாட்சிக் கோட்பாட்டை நிறைவேற்றுவதற்கு சிங்கப்பூரில் நடைபெற்ற அரசியல் சட்ட முன்னமர்வுக் கூட்டத்தில் உலகத்தமிழர் பேரவை வேறு அமைப்புக்களுடன் கலந்து பேசாமல் சென்றது கூட ஒரு சர்வதேசத்தின் நெறிப்படுத்தலில் உருவான COIN வீயூக அடிப்படையிலான அரசியல் முன்னகர்வு என்றும் கூறலாம்.
சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்த பாதிரியாரின் பெயர் பின்பு விலக்கப்பட்டதும் இணக்க அரசியலில் உடன்பட வைக்கும் நோக்கில் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
உலக அரங்கில் வல்லரசுகளின் செயல்பாடுகளை பார்ப்போமானால் – தம்மோடு தமது சிந்தனையோடு ஒட்டி ஓடுபவர்கள் ஒட்டிக்கொண்டு செல்லக்கூடியவர்களை முன்னிறுத்தி அவர்களுக்குச் சிவப்புக்கம்பளம் விரித்து தமிழினத்தின் பிரதிநிதிகளாக பிரச்சாரம் செய்து ஒரு மாயையை உருவாக்கி தமது சிந்தனையை கொண்டு செல்வார்கள்.
இவ்வாறு தான் இந்த உலகத்த தமிழர் பேரவை திசை திருப்பப்பட்டது. கொள்கையை விட்டு உலகத்தமிழர் பேரவை தனி நபர்களால் கையாளப்பட்ட போது ” இழந்த தமிழர் இறைமையை வென்றெடுப்பது, தமிழ் மக்களின் கடல் – நில எல்லைகளைப் பாதுகாப்பது” என்ற சிந்தனையை, 1976 – 1977 களில் மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்ற 15 நாடுகளின் அமைப்புகள் சேர்ந்து உருவானதே அனைத்துலக ஈழத் தமிழர் அவை.
இந்த சூழலில் உலகத் தமிழர் பேரவையில் இருந்து வெளியேறிய அமைப்புகள், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு, தாயகத்தில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூகம், EPRLF, டெலோ, ஆகிய அமைப்புக்களைக் கையகப்படுத்த ஒரு சில வல்லரசுகள் மற்றும் அவர்கள் பின்னணியில் இருக்கும் ஒரு சில நாடுகள் உதவியுடன் தமது பினாமிகள் ஆனா உலகத் தமிழர் பேரவை – TNA யின் வலைப்பின்னலுக்குள் பெர்லின் நகரில் Bergoff Foundation என்ற அமைப்பின் ஊடாக பொது அரசியல் கொள்கைத் தீர்மானங்கள் வகுத்தல் என்று கூறி எடுத்த முயற்சி கைகூடாத சூழலில் கைக்கூலி அமைப்புகள் ஆகிய உலகத் தமிழர் பேரவை (GTF) தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) ஆகிய அமைப்புக்களைத் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு தமது புவிசார் பொருளாதார நலன்களை நோக்கி ஒரு சில சர்வதேச நாடுகள் முன் நகர்த்தியது.
2000ம் ஆண்டிலிருந்து தலைவர் பிரபாகரனின் புகழ்பாடிய மதகுரு 2010 களில் இருந்து மெதுவாகக் குத்துக்கரணம் அடிக்கத் தொடங்குகிறார்.
தேசியத் தலைவர் தலையில் சுமந்த போராட்டத்தை நாம் தோளிலாவது சுமக்க வேண்டாமா என்று போதித்த போதகர் இப்போ சிறிசேனாவை தனது தலைவர் என்று ஏற்றுக்கொண்டு தமிழினத்தைச் சிலுவையில் அறைந்து விட்டார்.
இனவழிப்புச் செய்த சிங்களத் தலைவர்களுடன் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழினத்தின் அரசியரபிலாசைகளை அடமானம் வைத்துவிட்டார்.
அன்று மதகுரு பேசிய வார்த்தைகள்…….
“தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்” என தமிழ்த்தேசியக் கூட்மைப்புக்கு மதகுரு விடுத்த எச்சரிக்கை
“அநீதியான முறையில் நான் அடக்கப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டால் எந்த ஆயுதத்தையும் பாவித்து சண்டையிடும் உரிமை எனக்கு உண்டு” என்று இமானுவேல் அடிகளார் அமெரிக்காவில் பேசினார்.
” உண்மை எங்கள் விடுதலைக்கு வழி வகுக்கும்” என்று தான் எழுதிய நூல் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு அனுப்பிவைத்தார்.
இன்று இறைபோதகரின் திருவிளையாடல்கள்……..
தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிராகரிக்கும் ஒன்றுமில்லாத யாப்பைத் தலையில் வைத்துக் கொண்டு தனது தலைவர் சிறிசேன மற்றம் ரணிலின் ஆட்சியில் தமிழர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகச் சொல்லி தமிழினத்தையே ஏமாற்றுகின்றார் மதகுரு எஸ். ஜே. இமானுவெல்.
மிகஇரகசியமாக இலங்கை சென்ற மதகுரு இமானுவெல் அவர்கள் ரணில், மங்கள, போன்ற சிறிலங்கா அரச தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு நாகர் கோவிலில் சிறார்களைக் கொன்று குவித்துவிட்டு இப்போ குழந்தைகளை வைத்தே நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகிறேன் எனறு கொடுக்குக் கட்டிக்கொண்டு நிற்கும் முன்னாள் சனாதிபதி சந்திரிகாவையும் பார்த்துப் பேசியுள்ளார்.
ஈழத்தமிழர் வரலாற்றில் துரோகிகளுக்குப் பஞ்சமே இல்லை, அந்த வரிசையில் மதகுருவும் சேர்துள்ளார்.
தமிழ் மக்களின் இறைமை, தமிழிழர் தாயகத்தின் கடற்பரப்பு, நில எல்லைகளை பாதுகாக்க புறப்பட்ட மதகுரு எஸ். ஜே. இம்மானுவல் இன்று தமிழ் இன அழிப்பின் உச்ச கருவியாக செயற்படுகிறார்.
போராட்ட காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிகளின் பங்களிப்பு அளப்பெரியது. இறுதி யுத்தத்தின் போது போராளிகளுடன் சரணடைந்த அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜேசப், மன்னார் வங்காலையில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா பஸ்ரியான், அல்லைப்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம் பிரவுண் போன்ற தேசத்தின் மீது நேசம் கொண்ட வணபிதாக்களுடன் ஒப்பிடும் போது எஸ். ஜே. இமானுவெல் என்ற இந்தப் பாதிரியாரின் செயல்கள் எல்லாம் தமிழர் விரோதப் போக்காகவே உள்ளது.
பைபிளில் உள்ள நற்செய்தி நூல்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார், உயிர்த்தெழுந்தார், பின் வானத்திற்கு எழுந்தருளி பரலோகத்திற்கு சென்றார் என்று கூறுகின்றன.
அவர் மீண்டும் வருவார், அப்பொழுது பூமியின் அழிவு நிகழும், அன்று நல்லவர்கள் மட்டும் அவரோடு பரலோகத்திற்கு அழைத்து செல்லப்படுவர் என்றும் கூறுகின்றன.
அதேபோன்று தமிழர்கள் மீண்டும் மீண்டும் இந்த அழிவுகளிலிருந்தும் காட்டிக்கொடுப்புகளிலிருந்தும் எழுவர், தமது தாயகத்தை வெல்வர் என்பது உறுதி.
பாதர் இம்மானுவல், சுரேன் சுரேந்திரன் போன்றோரின் தலைகளை கழுவும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் மங்கள சரமரவீர விடம்தான் ஒப்படைத்ததாம்.