புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவாக இருப்போர் துரோகிகள் என்றும், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.
இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது டிவிசனுக்கு தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட, சரணடைந்த போராளிகள் பொதுமக்களைப் படுகொலை செய்தார்- போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து, எலிய என்ற அமைப்பின் ஊடாக, புதிய அரசியலமைப்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறார்.
கோத்தாபய ராஜபக்ச தலைமையில் கடந்த சனிக்கிழமை கம்பகாவில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன,
“புதிய அரசியலமைப்புக்கு ஆதரவானவர்கள் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டும். இவர்களுக்கு கௌரவமான இறுதிச்சடங்கிற்கு இடமளிக்கக் கூடாது.
மேற்குலக மற்றும் புலம் பெயர் தமிழர்களின் தேவைக்காக, தமிழ்ப் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தும் வகையில், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கிறது.
இந்தப் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோர், அதற்கு ஆதரவு வழங்குவோர் நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர்களாவர் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் மீது குண்டு வீச வேண்டும் என கூறிய வீரவன்சவுக்கு வந்தது சிக்கல்
நாடாளுமன்றத்துக்கு குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்ட அறிவிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த அறிவிப்பு குறித்து, முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், ஏனைய தரப்பினராலும் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பித்தவுடன், குறித்த அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.