சிறுமியின் வாழ்வை பாழாக்கிய ஆன்லைன் ஆபாச தாக்குதல்கள்

பாதிக்கப்பட்ட இளம்பெண் விக்டோரியா

ஆபாச செய்தி மற்றும் புகைப்படங்களில் தனது புகைப்படம் திணிக்கப்பட்டு அவை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் தனது வாழ்வு பாழாகியிருப்பதாக ஓர் இளம்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

லைவ்.மீ எனும் தொடர் நேரலை சமூக வலைதள ஆப் ஒன்றில் ‘போ போய் உன்னை நீயே கொன்றுவிடு’ என்றும் ‘கொள்ளையடிக்கப்பட வேண்டிய வீடு’ என குறிப்பிட்டு அவரது வீட்டு முகவரி டிவிட்டரில் பகிரப்பட்டது.

பிபிசிக்கு கிடைத்த புள்ளிவிவரங்களின்படி தீங்கிழைக்கும் தகவல்களை அனுப்புதல் குறித்த அறிக்கைகளில், ஒரு நாளில் இருநூறுக்கும் அதிகமான இது போன்ற தகவல்களை அனுப்பும் செயல் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ல் இந்த குற்றங்களின் எண்னிக்கை 79,372. அதற்கு ஓராண்டுக்கு முன்னதாக இந்த எண்ணிக்கை 42,910 ஆக இருந்தது.

பதினெட்டு வயதான விக்டோரியா லைவ்.மீ, ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கணக்கைத் தொடங்கியுள்ளார். அங்கே அவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்துள்ளனர்.

தனது புகைப்படத்தை வைத்து கிராபிக் செய்யப்பட்ட ஆபாசமான புகைப்படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அவரது வீட்டின் புகைப்படங்கள் ஆன்லைனில் பகிரப்பட்டதாகவும் விக்டோரியா கூறுகிறார். அதே வேளையில் ‘மரணித்துவிடு’ என இன்னொரு செய்தி அவருக்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.

” அவை எனது தன்னம்பிக்கையை குலைத்தன. நான் அந்த வீட்டை விட்டுக்கூட வெளியே செல்லமாட்டேன். நான் இப்போது பதற்றத்தை தணிப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்கிறார் விக்டோரியா.

” நான் வெளியே சென்றால் அவர்கள் அங்கே இருப்பார்களா என்பது எனக்குதெரியாது. இந்த எண்ணம் இன்னும் என் மனதின் பின்னால் இருக்கிறது . முடிவாக இந்த விஷயங்கள் எனது வாழ்க்கையை பாழாக்கியிருக்கின்றன. நான் மற்றவர்களுடன் எளிதில் பழகக்கூடிய நபர், நான் மீண்டும் பழைய ஆளாக மாற முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் ” எனச் சொல்கிறார் விக்டோரியா.

கைகளில் 'மொபைல்'

துயரத்தையும் பதற்றத்தையும் தந்த இணையத்தில் வந்த தீங்கிழைக்கும் தொடர்புகள் குறித்து காவல்துறையை அணுகினார். ஆனால் யாரையும் அவர்கள் கைது செய்யவில்லை.

” சில நேரங்களில் இது என்னுடைய தவறோ என உணர்வேன். ஆனால் இணையத்தில் மக்கள் எளிதில் இலக்கு வைக்கப்படுகிறார்கள் . புதிய நண்பர்களை உருவாக்குவது கேளிக்கைக்கான ஒன்று என நான் நினைத்தேன். ஆனால் அது இப்படி திரும்பும் என எப்போதும் எண்ணியதில்லை ” என்றார் அந்த பதினெட்டு வயது பெண்.

”மேற்கு யார்க் ஷைர் காவல்துறையினர் விக்டோரியா விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்துடன் அதிகாரிகள் தொடர்ச்சியாக இணைப்பில் இருந்து வருகிறார்கள் மேலும் அவர்களுக்கு விசாரணையின் நிலவரங்கள் குறித்து தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள் ” என்கிறார் காவல்துறை மேலதிகாரி டேவிட்ஸன்.

ஆன்லைன் பயனாளர்களை பாதுகாக்க சமூக வலைதள நிறுவனங்கள் நிறைய விஷயங்களை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் தேசிய அளவில் டிஜிட்டல் குற்றங்கள் குறித்து கையாளும் டிஜிட்டல் காவல்துறை வாரியத்தின் தலைவர்.

டாக்டர் மிக்கேல் நியூபெர்ரி

நாம் எப்படி சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறோம் என்பதற்கும் கடும் விமர்சனங்கள் அங்கே அதிகரிப்பதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறார் ஷிஃபீல்டு ஹாலம் பல்கலைக்கழகத்தில் தடயவியல் குறித்த உளவியல் பிரிவு மூத்த விரிவுரையாளரான டாக்டர் மிக்கேல் நியூபெர்ரி.

”தங்களது மொபைலை உடன்வைத்திருக்காத மக்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாக ஆகிவிட்டார்கள். இந்நாட்களில் நமக்கு எல்லாமே உடனடியாக கிடைத்து விடுகிறது” என்கிறார் நியூபெர்ரி.

தவறான முறையில் பயன்படுத்தப்படும் வெறுக்கத்தக்க புகைப்படங்கள் மற்றும் ஆபாச படங்களின் மீது புது கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டங்களை வைத்திருப்பதாக டிவிட்டர் முன்னதாக கூறியுள்ளது.