என்னை வளைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அபாண்டமாக பேசுகிறது பாஜக: திருமாவளவன்

திருமாவளவன்

தம்மை வளைக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் தம்மைப் பற்றி பாஜகவினர் அபாண்டமாகப் பேசுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பிபிசியிடம் தெரிவித்தார்.

மெர்சல் திரைப்பட விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் அவரை பா.ஜ.கவுக்கு இழுக்க அக்கட்சித் தலைவர்கள் முயல்கின்றனர் என திருமாவளவன் கூறியதையடுத்து, அக்கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விடுதலைச் சிறுத்தை கட்சியினர் கரூரில் நடத்திய போராட்டம், பா.ஜ.கவினருக்கும் வி.சி.கவுக்கும் இடையிலான மோதலாக முடிவடைந்தது. புதன்கிழமையன்றும் அக்கட்சியினர் சென்னையில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த விவகாரங்கள் குறித்து பிபிசி தமிழின் முகநூல் பக்கத்தில் நேரலையாகப் பேட்டியளித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். அந்தப் பேட்டியிலிருந்து:

மெர்சல் திரைப்பட விவகாரத்தில் திடீரென பா.ஜ.க. உங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?

அரசியல் விமர்சனங்களுக்கு அரசியல்ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட ரீதியாக தாக்குதல் நடத்தியதால் இந்த கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. மெர்சல் திரைப்படம் தொடர்பாக தமிழிசை ஒரு கருத்தைச் சொன்னார். ஜி.எஸ்.டி. தொடர்பாகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாகவும் அந்தப் படத்தில் வசனங்கள் இருந்ததை அவர் கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக ஊடகங்கள் என்னிடம் கேட்டபோது, அந்த வசனங்கள் ஒன்றும் கடுமையாக இல்லை. பல படங்களில் சமூக ரீதியான விமர்சனங்கள் உண்டு. அன்றைக்கு பராசக்தி முதல் அண்மையிலே வெளியான ஜோக்கர் வரை அப்படித்தான்.

மெர்சல் படம் தணிக்கைத் துறையால் அனுமதிக்கப்பட்ட படம். படத்தில் ஆட்சேபம் இருந்தால், தணிக்கைத் துறையை அவர்கள் எதிர்த்திருக்க வேண்டும், படத்தை தடைசெய்ய நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். மாறாக விஜய்யை தனிப்பட்ட முறையில் தாக்குவது ஏன் என்று கேட்டுவிட்டு, ஒருவேளை அவரை மிரட்டல் மூலம் தன்வயப்படுத்த, வளைத்துப்போட பா.ஜ.க. முயற்சிக்கிறதோ என அனுமானத்தின் அடிப்படையில் ஒரு விமர்சனத்தை வைத்தேன்.

இதற்கு, திருமதி தமிழிசை என்னை நேரடியாக கடுமையாக தாக்கிப் பேசினார். எல்லா இடங்களிலும் நிலங்களை வளைத்துப் போடுகிறார்; கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று சொன்னார். இதுவரை வி.சி.க. அப்படி எந்த செயலிலும் ஈடுபட்டதில்லை.

தமிழிசை குறிப்பாக அசோக் நகரில் உள்ள உங்களுடைய தலைமையகம் அமைந்திருக்கும் இடத்தைப் பற்றிச் சொல்கிறார்..

இந்த இடம் சுத்தக் கிரயம் பெறப்பட்டிருக்கிற இடம். அதற்கான விற்பனைப் பத்திரங்கள் கையிலே இருக்கின்றன. எங்களுக்கு விற்பனை செய்தவருக்கும் இன்னொருவருக்கும் இடையில் வழக்கு இருக்கிறது. அது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், இந்த இடத்தை நாங்கள் அபகரித்துக்கொண்டதாகச் சொல்வது அபாண்டம். முறைப்படி நாங்கள் கிரயம் செய்திருக்கிறோம். வழக்கு நடந்திருக்கிறது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது அவருக்கும் தெரியும்.

தமிழிசை, அவருடைய கணவர் டாக்டர் சௌந்தரராஜன், தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவன். என் தந்தை உடல்நலமின்றி இருந்தபோது, சவுந்தரராஜன் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டார். என் பிரச்சனைகளை அவர்களோடு நான் பேசியிருக்கிறேன். இந்த இடம் குறித்தும் அவர்களோடு பேசியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து என்று பேசுவது அபாண்டம். அதற்கு ஒரே காரணம், நான் பா.ஜ.க. மற்றும் சங்க பரிவார் அமைப்புகளை கொள்கை அடிப்படையில் விமர்சித்து வருகிறேன் என்பதுதான்.

என்னை அவர்களால் வளைக்க முடியவில்லை. அவர்களது இழுப்புக்கு நான் செல்லவில்லை என்ற ஆத்திரம்தான் அந்தப் பேட்டியில் இருந்தது. தமிழிசையைப் போலவே எச். ராஜாவும் அதே வார்த்தைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் என் மீது அபாண்டத்தை சொல்வது, நான் அவர்கள் இழுத்த இழுப்புக்குச் செல்லவில்லை என்பதால்தான்.

பொதுவாக சினிமா நடிகர்கள் இம்மாதிரி கருத்துக்களைச் சொல்லும்போது, அவர்களுக்கு அரசியல் விருப்பங்கள் இருப்பதாகத்தான் கருதப்படும். விஜய்க்கும் அம்மாதிரி விருப்பம் உண்டு என்றே தெரிகிறது. அந்தப் பின்னணியில் மெர்சல் பட வசனங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப. மெர்சல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது என்ற பேச்சு நீண்ட காலமாக அடிபட்டுக்கொண்டிருக்கிறது. விஜய் மக்கள் மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்துவது, அவருடைய தந்தை இது குறித்து பேசுவதெல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும். ஆனால், தனக்கு இருக்கும் சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி, வேறு எந்தப் பார்வையும் இல்லாமல், மக்களைப் பற்றிய கவலையோ, மனித நேய அணுகுமுறையோ இல்லாமல் கட்சியைத் தொடங்கலாம், ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பது அவலம். அது தமிழகத்திற்கே உண்டான நிலை. வேறு எந்த மாநிலத்திலும் அப்படி நடப்பதில்லை.

நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, அரசியல்வாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வருகிறது, ஏன்?

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லவில்லை. அவர்கள் வந்தால் என் களம் பறிபோகும் என்ற பயம் எனக்கில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நான் உண்மையில் அதை வரவேற்றிருக்கிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தபோது, நான் அதை வரவேற்றேன். ஆனால், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களின் உளவியல் எப்படி இருக்கிறது? எப்போது வேண்டுமானாலும் கட்சியைத் துவங்கலாம், ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். இது தமிழகத்தைப் பற்றிய, தமிழர்களைப் பற்றிய அவர்கள் மனநிலையை பிரதிபலிக்கிறது.

தமிழக பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இம்மாதிரி விஷயங்களைப் பெரிதாக்கி தொடர்ந்து தங்கள் கட்சியை பேசுபொருளாக வைத்திருக்கிறார்களோ என்றும் விமர்சிக்கப்படுகிறது. பிற அரசியல் தலைவர்களும் அந்த யுக்திக்கு பலியாகிறார்களா?

தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அந்த அளவுக்கு வியூகங்களை வகுக்கக்கூடியவர்கள் என்று நான் நினைக்கவில்லை. பேசத் தெரியாமல் பேசுகிறார்கள். பா.ஜ.க. தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், எச். ராஜா போன்றவர்கள் பேசுவதைப் பார்க்கும்போது, அவர் எதிலும் பயிற்சி பெற்றவர் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எப்போதுமே தடித்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மற்றவர்களைக் காயப்படுத்துமே என்ற குறைந்தபட்சக் கூச்சம்கூட இல்லாமல் பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். இப்படித்தான் சொல்லித்தருகிறதா? அந்த இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் நாகரீகமாக, எதிராளியையும் தம்வயப்படுத்துபவர்களாக, நா நயம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால், எச். ராஜாவைப் பொறுத்தவரையில், அவர் யாரைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கரடுமுரடாக, காட்டுத்தனமாக பேசுகிறார்.

எச். ராஜா விஜய்யைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜோசப் விஜய்’ என்று கூறுவதன் மூலம் அவருடைய கிறிஸ்தவ அடையாளத்தைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழகத்தில் கிறிஸ்தவராக இருந்து அரசியலில் வெற்றிபெற முடியாதா?

இதெல்லாம் அவர்களுக்குள்ளே ஊறிக்கிடக்கும் மதவாத வன்மம். சீமானை சைமன் என்றும்,விஜய்யை ஜோசப் என்றும், திருமுருகனை டேனியல் என்றும் இவர்கள் பரப்புகிறார்கள். அப்படி இருந்தால் என்ன, அவர்கள் அரசியல், திரைப்படத் துறையில் சாதிக்கக்கூடாதா?

கிறிஸ்தவராக இருப்பதோ, இஸ்லாமியராக இருப்பதோ அரசியலுக்கு உதவாது, அதனால் அதை சுட்டிக்காட்டலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறதா?

தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அப்படிப் பார்க்க மாட்டார்கள். வேண்டுமானால், அவர்கள் தொண்டர்களைத் தூண்டிவிட அது பயன்படலாம். அவர்களோடு இருக்கும் மதவாத சக்திகளை தக்கவைக்க அது பயன்படலாம். பொதுமக்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். இங்கு அது ஒரு பிரச்சனையல்ல.

வி.சி.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையிலான மோதலில் இன்று காலைகூட சென்னையில் பெரிய மறியல் போராட்டம் நடந்திருக்கிறது. அடுத்ததாக என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழிசையின் கருத்துக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். யாரும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்திருக்கும். நான் சொன்னதைக் கேட்டு கட்டுப்பாடு காக்கிறார்கள்.