பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இந்த அடிப்படையில்தான் வழங்கப்படவுள்ளன?

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன என்று அரசாங்க உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனாலும் இந்த நியமனத்திற்கான விண்ணப்பங்கள் அரசாங்கத்தால் கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான முடிவுத் திகதியும் அடுத்த மாதம் எட்டாம் திகதி எனக் குறிக்கப்பட்டிருந்தது.
should-my-child-get-another-degreeஇந்த நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று அரச இணையத்தளத்தில் வெளியான செய்தியால் பட்டதாரிகளிடையே தற்பொழுது பெரும் குழப்பம் நிலவிவருகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் பட்டதாரிகளின் விபரங்களை அரசாங்கம் தம்மிடம் கோரியிருந்ததாகவும், இதன்படி 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பட்டம்பெற்ற 3004 பட்டதாரிகளின் விபரங்களை அரசாங்கத்திடம் தாம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி பட்டம்பெற்ற ஆண்டுகள் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்படலாம் என்றும் நியமனம் தொடர்பான மேலதிக விபரங்கள் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, கிளி நொச்சி மாவட்டத்திலிருந்து 356பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 300வரையான பட்டதாரிகளின் விபரங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுனியா, மன்னார் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மாவட்டச் செயலகங்களைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சி பலனளிக்கவில்லை. இது தொடர்பான மேலதிக தகவல்களை உரிய தரப்பினரிடம் பெற்றுக்கொள்வதற்காக நாம் முயன்றுவருகிறோம்.