யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்று குற்றம் சாட்டி தமிழக மீனவர்கள் ஐந்து பேரை ஸ்ரீலங்கா கடற்படை இன்று அதிகாலை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களுடன் ஒரு விசைப்படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைதானவர்களை காங்கேசந்துறை துறைமுகத்தில் வைத்து விசாரணை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தகவலினை இந்திய ஊடகங்களும் உறுதி செய்துள்ள நிலையில் கைதான மீனவர்கள் தமிழ் நாடு புதுக்கோட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களான இன்னாசி,ஜெமினி, கருப்பசாமி,பூமி, சுதாகர் ஆகிய ஐந்து மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட விசைப்படகு ஜான் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் நடத்திவருவதோடு விசாரணைகளின்பின் பின்னர் மேற்குறித்த மீனவர்கள் அனைவரையும் யாழ்பாணம் கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறைத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.