எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவிக்குச் சிக்கலை ஏற்படுத்த தினகரன் தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குத் தூது விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா உயிரோடு இருந்தகாலகட்டத்தில் அ.தி.மு.க. உள்விவகாரங்கள் தொடர்பாக விசாரிக்க ஐவர் குழு செயல்பட்டது. இந்தக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இருந்தனர். ஜெயலலிதாவுக்குப் பின்னாலிருந்து அ.தி.மு.க. வழிநடத்தி வந்தவர் சசிகலா. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, சசிகலா ‘டிக்’ அடித்த பலர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டனர். இதனால் கட்சியினர் ஜெயலலிதாவுக்குரிய மரியாதையை சசிகலாவுக்கும் கொடுத்தனர். இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவிடம் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஜெயலலிதாவைப் போல சசிகலாவும் அ.தி.மு.க.வை ராணுவக்கட்டுப்பாடோடு வழிநடத்திச் செல்வார் என்றே கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலாவின் தலைமையை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியில் சிலர் ஏற்கவில்லை. இதனால், அ.தி.மு.க.வில் அணிகள் உதயமாகின. இந்தக் களேபரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பளிக்கப்பட்டது. சசிகலாவும், தினகரனும் சிறைக்குச் செல்வதற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி முதல் பதவியிலிருந்தவர்கள் அவர்கள் இருவரின் சொல்பேச்சு கேட்டு நடந்தனர். டெல்லிக்குச் சென்றுவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் மாறின.
சசிகலா, தினகரனுக்கு எதிராக கொங்கு மண்டல அமைச்சர்கள் பேசத் தொடங்கினர். ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் தர்மயுத்த கோரிக்கைகளைத் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்றுக்கொண்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு கைகுலுக்கியதோடு செப்டம்பர் 12ம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்தனர். இது, சசிகலா தரப்பினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் புரட்சி என்று தினகரன், எடப்பாடி பழனிசாமிக்குக் காலக்கெடு விதித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு, தினகரனைக் கட்சிப் பதவியிலிருந்து நீக்கியதோடு அவரைக் கடுமையாக விமர்சித்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி தரப்பும் இணைந்தபிறகு முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் எளிதில் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்பின் முட்டுக்கட்டையால் இணைந்த கரங்களான பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தற்போது, பா.ஜ.க. மேலிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குச் சாதகமாக சூழ்நிலை இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட வித்யாசாகரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தபோது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, யாருக்குச் சாதகமாக வரும் என்பது தெரியவில்லை.
இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்துவரும் மத்திய உளவுத்துறை தினமும் டெல்லிக்கு அறிக்கைகளை அனுப்பிவருகிறது. சமீபகாலமாகச் சென்ற அறிக்கைகள் அனைத்தும் பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு பாதகமாகவே உள்ளதாம். தமிழக பா.ஜ.கவுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே நடந்துவரும் மோதல்கள், டெங்கு உயிரிழப்பு, கந்துவட்டி, மெர்சல் பட விவகாரம் என எடப்பாடி பழனிசாமி அரசுமீது எழுந்த விமர்சனங்கள் குறித்து விரிவாக அறிக்கைகள் சென்றுள்ளன.
முன்னதாக பரோலில் வெளியில் வந்த சசிகலாவுக்கு அ.தி.மு.க.விலிருக்கும் செல்வாக்கு குறித்த ரிப்போர்ட்டும் டெல்லிக்குச் சென்றுள்ளதாம். சசிகலா குடும்பத்தினருக்கு அ.தி.மு.க.வில் எந்தவித செல்வாக்கு இல்லை என்றே ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பும் டெல்லியில் ஒப்பதல் வாக்குமூலம் அளித்திருந்தனர். ஆனால், அ.தி.மு.க.வில் இன்னமும் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாளர்கள் இருக்கும் விவரங்கள் உளவுத்துறை மூலம் டெல்லிக்குச் சென்றதும் பா.ஜ.க. மேலிடம் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
சென்னை எம்.ஜி.ஆர். இல்லத்தில் நடந்த அ.தி.மு.க. ஆண்டுவிழாவில் தினகரனுக்குக் கூடிய கூட்டத்தைக் குறிப்பிட்டு அறிக்கை அனுப்பியுள்ளது உளவுத்துறை. அதில், நிர்வாகிகளைத் தவிர தொண்டர்களிடம் இன்னமும் சசிகலா தரப்புக்குச் செல்வாக்கு உள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீதான குற்றச்சாட்டுக்களை மக்கள் மறந்துவிட்டதாகவும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
சமீபகாலமாக தமிழக அரசியல் சூழ்நிலையைக் கவனித்த பா.ஜ.க. மேலிடம், தமிழகத்துக்கு நிரந்தரமாக ஆளுநரை நியமித்தது. இரட்டை இலைச் சின்னம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு போன்றவை தள்ளிபோவதற்கும் இதுதான் காரணம் என்கின்றன உள்விவர வட்டாரங்கள். நீதிமன்றம், டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டபோதிலும் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்தைப் பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினருக்குக் கொடுப்பதற்குமுன் சில நிபந்தனைகள் குறித்து விரிவாக டெல்லி மேலிடம் பேசியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணி, பா.ஜ.க.வுக்குக் குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கீடு போன்றவை குறித்து பா.ஜ.க மேலிடம் அ.தி.மு.க. அதிகாரத்திலிருப்பவர்களிடம் பேசியுள்ளது. அதற்கும் தற்போதைய அ.தி.மு.க. அதிகார மையத்தில் உள்ளவர்கள் கிரீன் சிக்னல் காட்டியுள்ளனர். ஆனால், மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் சசிகலா, தினகரனுக்குக் கட்சியில் உள்ள செல்வாக்கு தேர்தலில் எதிரொலித்தால் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தரப்புக்கு டெல்லி மேலிடம் சில அசைன்மென்ட்களைக் கொடுத்துள்ளது. அதில், ‘உங்கள் இரு தரப்பினருக்கிடையே ஒற்றமையில்லை. அதனால் கட்சியில் சசிகலா தரப்பு செல்வாக்கு அதிகரித்துவருகிறது. எனவே, கட்சியின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கொண்டுவாருங்கள். இல்லையெனில் உங்களுக்குத்தான் சிக்கல் ஏற்படும்’ என்று எச்சரிக்கும் தொனியில் டெல்லி மேலிடத்திலிருந்து தகவல் வந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் சோர்வடைந்துள்ளனர்.
டெல்லி தகவல் குறித்து பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தத் தகவல் தினகரன் தரப்புக்குக் கிடைத்ததும் அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டல டீம் நடத்தும் களேபரங்களால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
டெல்லி மேலிடம், கொங்கு மண்டலம் ஆகிய காரணங்களைக் குறிப்பிட்ட தினகரன் தரப்பு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்களிடம் போனில் பேசியுள்ளனர். அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர்கள், ‘ எடப்பாடி பழனிசாமியைவிட செங்கோட்டையனுக்கு முதல்வர் பதவி கொடுக்கலாம் நான் ஆரம்பத்திலேயே கூறினோம். ஆனால், நீங்கள் பன்னீர்செல்வம் மீதுள்ள கோபத்தில் தவறான முடிவை எடுத்துவிட்டீர்கள். கொங்கு மண்டல டீமுக்குப் பதிலடி கொடுக்க சமுதாய ஒற்றுமையை நிலைநாட்டுவோம்’ என்று கூறியுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு இடையே நடந்துவரும் முட்டல், மோதல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று உறுதியாக நம்புகின்றனர் தினகரன் தரப்பு. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்துவதில் காட்டும் அக்கறையை மக்கள் நலனில் செலுத்துவதில்லை. கந்துவட்டி, டெங்கு ஆகிய பிரச்னைகளை மக்கள் மன்றத்தில் எதிர்கட்சியினரோடு தினகரன் தரப்பினரும் எடுத்துச் செல்ல ஆலோசித்துவருகின்றனர். இது, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று தினகரன் தரப்பினர் கணக்குப் போட்டுள்ளனர். தினகரனின் கூட்டல், கழித்தல் கணக்கு எடப்பாடி பழனிசாமிக்குச் சிக்கலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.