தமிழகத்தின் அடுத்த மிகப் பெரிய பிரச்சனையாக தற்போது உருவெடுத்திருப்பது மின்சாரத் தட்டுப்பாடு என்கிறார்கள். தற்போதோ, பல்வேறு இடங்களில் மின்வெட்டு இரவு நேரங்களில் நீடிக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு வழக்கமாகியுள்ளது.
மின் உற்பத்தி குறைவினால் தான் இத்தகைய மின்வெட்டு என்றாலும், அந்த உற்பத்திக் குறைவிற்கு மூலப்பொருளான நிலக்கரியின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புதான் இதற்கான முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்திற்கு முக்கிய நிலக்கரி விநியோகிக்கும் மாநிலங்களாகத் திகழ்பவை ஒடிஷாவும், ஆந்திர மாநிலமும் தான். தற்போது அங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து மிகக் குறைந்த அளவிலேயே நிலக்கரி விநியோகிக்கப்படுவதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்திற்கு நாள் ஒன்றிற்கு 75 ஆயிரம் டன்கள் நிலக்கரித் தேவைப்படுகிறது. ஆனால், இதுநாள் வரையிலும் நாளொன்றுக்கு 30 ஆயிரம் டன்கள் மட்டுமே நிலக்கரி விநியோகிக்கப் பட்டு வருகிறது. பொதுவாக, அடுத்து வரும் 30 நாள்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது கையிருப்பிலுள்ளதோ வெறும் 3 நாட்களுக்கு மட்டும் தேவையான நிலக்கரித்தான்.
தமிழகத்தின் மின் உற்பத்தி தற்போது நீர் மின் மற்றும் அனல் மின் நிலையங்களைச் சார்ந்தே இருப்பதாகவும், காற்றாலை மின்சாரம் இப்போது பெருமளவில் குறைந்துவிட்டது என்றும் கூறும் மின் துறை அதிகாரிகள், கிடைப்பதை வைத்தே மின் உற்பத்தியை ஈடுகட்டுவதாகக் கூறுகின்றனர்.
இதற்கிடையே இந்தப் பிரச்சனையை துணை முதல்வர் ஓ.பி.எஸ், மின் துறை அமைச்சர் பி.தங்கமணி, முதன்மைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் ஆகியோர் மத்திய நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன் எடுத்துச் சென்றதாகவும், தமிழ்நாடு பொது மற்றும் மின்பகிர்மானக் கழகத்திற்கு கூடுதல் நிலக்கரி விநியோகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழை முடிவடைந்து வடகிழக்குப் பருவமழை தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காற்றின் வேகம் மிகவும் குறைந்து, காற்றாலை மின் உற்பத்தி 503 மெகாவாட் என பத்தில் ஒரு பங்காகக் குறைந்தது. இதனால் தமிழகத்திற்கு மின் பற்றாக்குறை ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழலும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தடுத்து பிரச்சனைகள் சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கும் சமயத்தில், அடுத்து மின் தட்டுப்பாடும் சேர்ந்து இருளில் மூழ்கினால் மேலும் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவெடுக்கும்.