சக்தி, துறைமுகங்கள், உட்கட்டமைப்பு துறைகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு சிறிலங்காவுக்கு உதவ கட்டார் இணக்கம் தெரிவித்துள்ளது. கட்டாருக்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
டோஹாவில் உள்ள கட்டார் அதிபர் மாளிகையில், நேற்று இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் .இடையிலான சந்திப்பு இடம்பெற்றது
இருதரப்புக் கூட்டத்துக்குப் பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களும், தனித்தனியாகவும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கன் விமான சேவையை பங்குடமை அடிப்படையில் இணைந்து செயற்படுத்தவும், கட்டாரில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகள், சிறிலங்கா பாடத்திட்டத்தைக் கற்பதற்கான பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கவும், உதவுமாறு கட்டார் அமீரிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை விடுத்தார்.
இதுபற்றிக் கவனம் செலுத்துவதாக கட்டார் அமீர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் 7 புரிந்துணர்வு உடன்பாடுகளும் இந்தச் சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளன.
முன்னதாக கட்டார் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அந்த நாட்டின் பிரதமர் அப்துல்லா பின் நாசர் பின் கலீபா அல் தானி சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
டோஹாவில் சிறிலங்கா அதிபர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று கட்டார் பிரதமர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.