இலங்கை அரசியலமைப்பிற்குள் இந்தியா பலவந்தமாக திணித்த 13ஆவது திருத்தத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் யோசனைகள் முன்வைக்
கப்பட்டுள்ளன. தமிழீழத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்க நல்லாட்சி அரசாங்கம் முற்பட்டால் மகாசங்கத்தினரின் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என ஸ்ரீகல்யாணி சாமகிரிதம்ம சங்க சபையின் அநுநாயக்க பெல்லன்வில விமலரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்தப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி மூன்று பிரதான பௌத்த பீடங்களும் விரைவில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட உள்ளன . அதே போன்று அரசாங்கத்தின் அரசியலமைப்பு நடவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பெல்லன்வில விமலரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பில் மஹா சங்கத்தினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அனைத்து இன மக்களினதும் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி பிரிவினைவாதத்தின் பொறிக்குள் சிக்க வைக்கும் வகையிலேயே தற்போதைய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளும் முன்னெடுப்புகளும் காணப்படுகின்றன.
பாராளுமன்றத்தின் அதிகாரங்களை குறைக்கும் சரத்துக்கள் , ஆளுநர் ஊடாக மாகாண சபைகளை கட்டுப்படுத்தி ஜனாதிபதியின் அதிகாரங்களை இரத்து செய்யும் வகையிலான பரிந்துரைகள் , வடக்கு மற்றும் கிழக்கை மீளிணைக்கும் யோசனை மற்றும் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலான திருத்தங்கள் என்பன வெளிப்படையாகவே காணப்படுகின்றன.
பரஸ்பர விரோத அர்த்தங்களை தர கூடிய சொற்கள் தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கில மொழி சொற்கள் பல காணப்படுகின்றன.
மறுபுறம் சாதாரண மக்களுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவையில்லை. இலங்கையில் வாழும் மொத்த தமிழர்களில் வெறும் 32 வீதமான தமிழர்கள் மாத்திரமே வடக்கில் வாழ்கின்றனர்.
இவர்களிலும் சிறிய தொகையினரே பல்வேறு உள்நோக்கங்களுடன் செயற்பட்டு புதிய அரசியலமைப்பு குறித்து பேசுகின்றனர்.
உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் பிரிவினைவாத சக்திகள் இலங்கைக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகின்றன. எனவே மீண்டும் சர்வதேசத்திற்கு அடிபணியும் நிலைமை ஏற்பட்டு விட கூடாது .
புதிய அரசியலமைப்பு என்ற போர்வையில் நாட்டிற்குள் கொண்டு வருவது என்ன ? என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். தற்போதைய புதிய அரசியலமைப்பிற்கான முன்னெடுப்புகள் அனைத்தும் சமஷ்டியை நோக்கியே செல்கின்றன.
பல விடயங்களை அரசாங்கம் மறைத்துள்ளது. எனவே எந்தவகையிலும் தற்போதைய புதிய அரசியலமைப்பிற்கு அனுமதி வழங்க முடியாது. அரசாங்கம் உடனடியாக தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் .
அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்கள் மிகவும் தெளிவாக இதனை குறிப்பிட்டுள்ளனர். அதே போன்று இலங்கையின் அதி உச்ச பௌத்த பீடங்களான சியாம் , அமரபுர மற்றும் ராமஞ்ஞ பீடங்களின் மஹாநாயக்க தேரர்கள் கூட்டு அறிக்கை வெளியிட உள்ளனர்.
அதன் பின்னர் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்து பேச முடியாது. பௌத்த சாசனத்தை மீறி செயற்பட நினைத்தால் நிலைமை மோசமடையும்.
அனைத்து பிக்குகளும் பல்வேறு வழிகளில் அரச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படுவார்கள். இதனால் ஆட்சியை விட்டு செல்ல வேண்டிய நிலையே நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்படும். புதிய அரசியலமைப்பு ஒன்றை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதாது.
நிச்சயம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போது சர்வஜன வாக்கெடுப்பை தோல்வியடைய செய்வோம். தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்பை யாருக்கும் உருவாக்க இடமளிக்க முடியாது.
மாகாண சபை முறைமையை 13 திருத்தம் ஊடாக இந்தியா பலவந்தமாகவே இலங்கை அரசியலமைப்பிற்குள் திணித்தது. தமிழீழ கோரிக்கையின் ஒரு பகுதியே அதுவாகும் .
எனவே சட்டபூர்வமாக தமிழீழம் உருவாக்கப்படும் நிலைமையே புதிய அரசியலமைப்பில் காணப்படுகின்றது. இதனை கண்டித்து புதிய அரசியலமைப்பு ஒன்றின் அநாவசிய தன்மையை குறிப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மகஜரை அனுப்பு வைத்துள்ளோம் என தெரிவித்தார்.