அரியாலையில் கடந்த ஞாயிறன்று இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸ் குழு ஒன்று நேற்று அதிரடியாக மண்டைதீவு கடற்படை முகாமினுள் புகுந்து தேடுதல் நடத்தியது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று முகாமினுள் தரித்து நிற்கின்றதா என்பது தொடர்பிலேயே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாணம் நீதிவானின் அனுமதி பெறப்பட்ட பின்னர் நேற்று மாலை இந்தத் தேடுதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
யாழ். நகரை அண்டியுள்ள உதயபுரத்தில் கடந்த 22ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டொன் பொஸ்கோ டெஸ்மன் (வயது –25) சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடற்றொழிலாளியான இவர் மற்றொருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இடைமறித்த சிலரால் சுடப்பட்டார்.படுகாயமடைந்த அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அடுத்தடுத்து இரு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.
ஆனாலும், துப்பாக்கிக்குண்டு நுரையீரலைத் தாக்கியிருந்தமையால் உட்குருதிக் கசிவு அதிகமாகி அவர் உயிரிழந்தார்.இது தொடர்பான விசாரணைகள் மூன்று பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கொலையில் படையினரின் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்கிற கோணத்தில் பொலிஸார் ஆரம்பம் முதலே விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் அவர்கள் தமது ‘பி’ அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
கொலையின்போது பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்ப
டும் வாகனம் ஒன்று மண்டைதீவு ‘கோத்தபாய’ கடற்படை முகாமில் நிற்பதாகச் சந்தேகிக்கப்படுவதால் அந்தத் தளத்திற்குச் சென்று சோதனை நடத்த அனுமதி தருமாறு நீதிவானிடம் பொலிஸார் நேற்றுக் கோரினர்.
மாலை அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து
மாலை 6 மணியளவில் மண்டைதீவு கடற்படைத் தளத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கு சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் மற்றும் விசாரணைகளில் ஈடுபட்டனர்.
எனினும் அவர்கள் தேடிச் சென்ற வாகனம் எதுவும் நேற்றைய நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டவில்லை என்றே தெரிகின்றது.இந்தக் கொலையில், கடற்படையினரின் எந்தப் பிரிவுக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் பொலிஸாரின் தீவிர விசாரணை தொடர்கின்றது.
”கொலையாளிகளை நெருங்கிவிட்டோம் என்று எண்ணுகின்றோம். விரைவில் முக்கிய திருப்பம் கிடைக்குமென சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னான்ன்டோ தெரிவித்துள்ளார் .