செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சுயாதீன பேரவை குறித்து மீள் பரிசீலனை

அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் New Media ஆகிய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்த, சுயாதீன பேரவை ஒன்றை அமைப்பதற்கான வரைபு ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த வரைபு தொடர்பாக ஊடக அமைப்புக்கள் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வருகின்றன.

MX2017-Jonathan-Perelman-Post-Head-Image

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த வரைபு அவசியம் என கூறப்பட்டாலும், செய்திகளை தரநிர்ணயம் செய்வது என்ற போர்வையில் செய்தியாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் போக்குகளை ஏற்க முடியாது என கூறப்பட்டதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சுயாதீன பேரவையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களில் அரசாங்கத்தால் நடத்தப்பட்டன. ஊடக அமைப்புகளும் இந்த வரைபில் உள்ள ஆபத்துக்கள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் இது தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார். செய்தி ஊடகங்களை தரம்பிரித்து கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என ஊடக அமைப்புகள் கூறுகின்றன.

ஏனெனில் New Media எனப்படும் பல இணைய செய்தித்தளங்கள் இயங்குகின்றன. அவற்றில் சில செய்தித் தளங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள், மற்றும் ஊடக ஒழுக்க விதிகளுக்கு மாறாக செய்திகளை வெளியிடுகின்றன.

குறிப்பாக குடும்ப பிரச்சினைகள், பெண்கள் பற்றிய தவறான கருத்துகளை நேரடியான படங்களுடன் சில செய்தித் தளங்கள் வெளியிடுகின்றன. ஆகவே அவ்வாறன செய்தித் தளங்களை கட்டுப்படுத்த அல்லது விசாரணை நடத்தி வெளியிடப்பட்ட செய்தி குறித்தும், அந்த செய்தி சேகரிக்கப்பட்ட மூலத்தையும் கேட்டு அறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.

அவ்வாறு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை ஊடக ஜனநாயக மீறலாகவும் கருத முடியாது. ஆனால் பிரதான ஊடகங்களை (Mainstream media) அவ்வாறு கட்டுப்படுத்த முடியாது என ஊடக அiமைப்புகள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக பிரதான ஊடங்களில் வெளிவரும் அரசியல், பொருளாதாரம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள் பற்றிய மூலத்தை விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அதாவது குப்பைத் தனமாக செய்தி எழுதும் செய்தியாளனையும் சமூக விடயங்களை முக்கியப்படுத்தி எழுதும் செய்தியாளனையும் ஒரே தராசில் நிறுத்திப்பார்க்க முடியாதென ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதான ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்றின் மூலம் தொடர்பாக குறித்த, அந்த செய்தி எழுதிய செய்தியாளரைத் தவிர வேறு யாருக்கும் செய்தி எடுக்கப்பட்ட மூலம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கூட, குறித்த அந்த செய்தி தொடர்பாக, செய்தி எழுதிய செய்தியாளனிடம் செய்தியின் மூலத்தை கேட்க முடியாது என்றும் ஊடக அமைப்புகள் கூறியுள்ளன. ஆகவே செய்தி ஊடகங்களை கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் பிரதான செய்தி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்து, உயர் நீதமன்ற விசாரணையில் கூட செய்தியின் மூலத்தை கேட்க முடியாது என்ற விதிமுறைகள் அரசாங்கம் தயாரித்த வரைபில் இல்லையென ஊடக அமைப்புகள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சுயாதீன பேரவை ஒன்றை அமைப்பு குறித்து, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றின் ஊடகத்துறையைச் சேர்ந்த மூத்த பேராசிரியர் ஒருவரின் ஆலோசணையை அரசாங்கத் தகவல் திணைக்களம் பெற்றுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த வரைபு தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலணை செய்து வருவதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.