இந்தியத் துணைக்கண்டம் 1947-ல் பிரிந்தபோது, மன்னராட்சி மாகாணமான ஜம்மு காஷ்மீர் காத்திருந்து பார்த்தது. தனது சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என ஜம்மு காஷ்மீர் நம்பியது. ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் அது ஒரு பக்கமாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காஷ்மீர் வரலாற்றில் அப்போது நடந்த ஒரு முக்கிய நிகழ்வு, தற்போதும் விவாதத்திற்கு உள்ளாகி வரும் கதையினை பற்றி அறிய பிபிசியின் அமீர் பீர்ஜாடா காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சென்றார்.
அக்டோபர் 15, 1947-ல் முகமது சுல்தான் தாக்கருக்கு வயது 15. உரியில் உள்ள மோஹுரா நீர்மின் நிலையத்தில் பணியாற்றினார்.
ஸ்ரீநகருக்கும் மின் விநியோகம் செய்யும் ஒரே மின்நிலையம் இது தான். பாகிஸ்தானில் இருந்து பாஸ்து பழங்குடியினர் காஷ்மீருக்கு படையெடுத்து வந்ததை அவர் நினைவில் வைத்துள்ளார். அவர்களைப் பற்றி குறிப்பிட” கபாலிஸ்” என்ற உருது வார்த்தையை சுல்தான் பயன்படுத்துகிறார்.
பழைய மின் நிலையத்தின் இடிபாடுகள் அருகே அமர்ந்து,”மகாராஜாவின் ராணுவம் உரியில் பின்வாங்கி மொஹுராவுக்கு வந்தது” என்கிறார்
”இங்கு பழங்குடியினருக்கு எதிராக மகாராஜாவின் ராணுவத்தினர் சண்டையிட்டனர். அவர்கள் பதுங்கு குழிகளை உருவாக்கினார்கள். கபாலிஸ்கள் வழக்கமாகக் காடுகளில் இருந்து வருவார்கள். கபாலிஸ்கள் துப்பாக்கி சூடு நடத்தியபோது, மகாராஜாவின் ராணுவத்தினர் ஓடிவிட்டனர்” என்கிறார்.
கபாலிஸ்களை ”கொள்ளைக்காரர்கள்” என்கிறார் சுல்தான்.
”நாங்கள் பயத்தில் இருந்தோம். யார் வேண்டுமென்றாலும் எங்களைக் கொன்றிருக்கலாம். அதனால் தான் நாங்கள் ஒளிந்துகொண்டோம்” என்கிறார். அவர்கள் காட்டுக்குள் ஓடி ஐந்து முதல் எட்டு நாட்கள் தங்கியிருந்ததை விளக்குகிறார்.
வெளிநாட்டுச் சக்தி
இந்த நிகழ்வுகள் மர்மமாக உள்ளது. பாகிஸ்தான் பழங்குடியினர் படையெடுத்து வந்தார்களா அல்லது தங்களது முஸ்லிம் சகோதரர்களை பாதுகாக்க வந்தார்களா?
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட ஜம்மு காஷ்மீர் மாகாணத்தை, இந்துவான மகாராஜா ஹரி சிங் ஆட்சி செய்தார்.
1930 முதல் அதிக உரிமைகள் கேட்டு முஸ்லிம்கள் போராட்டம் நடத்துவது அதிகரித்தது.
1947 ஆகஸ்ட் மாதம் இந்தியா பாகிஸ்தான் பிரிந்தபோது ஏற்பட்ட வன்முறையில் இருந்து ஜம்மு காஷ்மீரும் தப்பவில்லை.
பஞ்சாபில் இருந்து ஜம்முவுக்கு தப்பித்து வந்த இந்துக்கள், கொலை, பாலியல் வன்புணர்வு என தாங்கள் பாதிக்கப்பட்ட கொடூர கதைகளை பகிர்ந்துகொண்டனர்.
ஜம்முவில் உள்ள இந்து சமூகத்தினர், அண்டை முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பினர்.
பாகிஸ்தானில் இருந்து வந்த பாஸ்து பழங்குடியினரில் சில “மோசமானவர்கள்” இருந்தாலும், அவர்கள் உதவி செய்யவே காஷ்மீர் வந்தனர் என்கிறார் வரலாற்று ஆசிரியரும், காஷ்மீர் அரசின் மூத்த பொறுப்புகளை வகித்தவருமான டாக்டர் அப்துல் அஹத்.
”ஆகஸ்ட் 15க்கு பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது” என்கிறார் அவர்.
”காஷ்மீரின் முஜஃபராபாத் மற்றும் பூன்ச் பகுதி மக்கள் அறிவித்த சுதந்திர அரசை நிலைப்படுத்தவும், அவர்களுக்கு உதவும் பாகிஸ்தானை சேர்ந்த மக்கள், முஜாஹிதீன்கள், ஃபரிதிஸ், பதான்ஸ், பெஷாவரிஸ் ஆகியோர் காஷ்மீர் வந்தனர்” என்கிறார்.
காஷ்மீரில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாகவே பழங்குடியினர் படையெடுத்தனர் என்பதைப் வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் சித்திக் வாஹித் ஒப்புக்கொள்கிறார்.
”பாகிஸ்தான் பதற்றமடைந்து, பாஸ்துகளை போல உடையணிந்த படையை அனுப்பியது” என்கிறார்.
அப்போது சூழ்நிலை வேண்டுமென்றால் குழப்பமானதாக இருக்கலாம். ஆனால், சில பாகிஸ்தான் பழங்குடியினரின் செயல் மோசமாக இருந்தது.
ஒரு கன்னியாஸ்திரீயின் கொலை
1947 அக்டோபர் 27-ம் தேதி பாரமுல்லாவில் உள்ள செயிண்ட் சோசப் கான்வென்ட் மற்றும் மருத்துவமனையை பாகிஸ்தான் பழங்குடியினர் தாக்கினர்.
வடக்கு காஷ்மீரில் உள்ள ஒரே கிருஸ்துவ மையம் இது தான். சிஸ்டர் எமிலியா பிழைத்துக்கொண்டார். 1987-ல் சிஸ்டர் செலிஸ்டினா இந்த கான்வென்டில் சேரும் வரை எமிலியா உயிருடன் இருந்தார்.
எமிலியா இறந்துவிட்டாலும், சம்பவத்தின் போது அவர் நேரில் பார்த்ததை செலிஸ்டினா நினைவு கூறுகிறார்.
”கபாலிஸ்களின் தாக்குதலால் இங்குப் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.” என்கிறார் அவர். கல்லறை வழியாகக் காற்று வீசியடித்தது போல இருந்தது. சூரியன் மறையத் தொடங்கியது.
” பரிட்டோ, கோலோனெல் டைகேஸ், அவரது மனைவி செவிலியர் பிஹிலோமேனா மற்றும் சிஸ்டர் டெரிசலீனா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்” எனவும் அவர் கூறுகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மோடியா தேவி கபூரும் கொல்லப்பட்டார்.
பழங்குடியினருக்கு பாகிஸ்தான் ராணுவ மறைமுகமாக ஆதரவு அளித்தது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
பாரமுல்லாவுக்கு பிறகு அவர்களின் அடுத்த இலக்கு ஸ்ரீநகரும் அதன் விமானத்தளமும்.
இந்தியத் தியாகி
ஆனால், பாகிஸ்தானியர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும் ஒரு முக்கிய பணியை ஓர் இளைஞர் செய்தார். முகமது மக்பூல் ஷெர்வானிக்கு அப்போது 19 வயது மட்டுமே.
பாரமுல்லா சுற்றி தனது இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்த ஷெர்வானி, இந்திய ராணுவம் ஸ்ரீநகருக்கு வந்துவிட்டது எனவும், புறநகர் பகுதியில் ராணுவம் இருக்கிறது எனவும் பாகிஸ்தானிய பழங்குடியினரிடம் கூறினார்.
பாகிஸ்தானியர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க இது மட்டும் போதுமானதாக இல்லை. இந்திய படைகள் அக்டோபர் 27, 1947-ல் ஸ்ரீநகரில் தரையிறங்கி பாகிஸ்தானியர்களுக்கு எதிராகச் சண்டையிட ஆரம்பித்தது.
ஷெர்வானியின் இரட்டை வேடத்தைக் கண்டுபிடித்த பழங்குடியினர், அவரைச் சிலுவையில் அறைந்தனர்.
இதனால், ஷெர்வானி இந்திய அரசால் தியாகியாக கருதப்படுகிறார்.
அவரின் குடும்பத்தினர் பேட்டியளிக்க மறுத்துவிட்டனர்.
70 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஒரு பரந்த அணிதிரள்வு இருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீநகரின் வீதிகளுக்கு வந்தனர். மகாராஜாவுக்கு எதிராகப் போராடிய மக்கள், காஷ்மீர் தேசிய தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கும், இந்திய நிர்வாகத்திற்கும் ஆதரவளித்தனர்.
ஒரு காலத்தில் ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த அரச டோக்ரா குடும்பத்தைச் சேர்ந்த பீம் சிங்,” மகாராஜா ஹரி சிங் அச்சுறுத்தப்பட்ட போதிலும், அவர் இயல்பாக இந்தியாவுடன் இணைந்தார்” என்கிறார்.
இந்தியா, பாகிஸ்தானுடன் இணையாமல் ஜம்மு காஷ்மீரை சுதந்திரமாக வைத்திருக்க மகாராஜா விரும்பினாரா என கேட்ட போது, மகாராஜாவின் அறிவை பற்றி பீம் சிங் புகழ்கிறார்.
”ஜம்மு காஷ்மீரின் கலப்பு கலாசாரத்தை மகாராஜா அறிவார். இந்தியாவில் கலப்பு கலாசாரத்தையும் அவர் அறிவார்” என்கிறார். இதைக் கூறும் போது அவரது கண்கள் ஒளிருகிறது.
”அவர் ஜனநாயகத்தைப் புரிந்தவர். அவர் ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்து கேட்க விரும்பினார்” என்கிறார்.
என்ன நடக்கிறது என்பதை காஷ்மீர் மக்கள் கொள்ளாத நிலையில், காஷ்மீர் இணைப்பு இரு அப்பாவி செயல் என பல காஷ்மீர் மக்கள் கூறுகின்றனர்.
”போலி இணைப்பு மூலம், காஷ்மீர் வலுக்கட்டாயமாக இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது” என்கிறார் வரலாற்று ஆசிரியர் டாக்டர் அப்துல் அஹத்.
”இந்த இணைப்புக்கு மக்கள் ஆதரவாக இல்லை. வெகு சிலரே ஷேக் அப்துல்லாவுக்கு ஆதரவளித்தனர்” என்கிறார்.
”காஷ்மீரின் சுல்தான்” ஆக வேண்டும் என்ற தனது தனிப்பட்ட லட்சியத்திற்காக ஷேக் அப்துல்லா இந்திய அரசுடன் இணைந்துகொண்டார் என்கிறார் அஹத்.
நிலைமை வித்தியாசமாக இருந்தது என்கிறார் வரலாற்று ஆசிரியரான பேராசிரியர் சித்திக் வாஹித்.
”கணிசமான மக்கள் ஷேக் அப்துல்லாவுக்கு ஆதரவாக இருந்ததால் அவர்கள் மிகிழ்ச்சியடைந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். அந்த நேரத்தில் ஷேக் அப்துல்லாவுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் வழங்கப்பட்ட உத்திரவாதங்களின் அடிப்படையில் இதற்கு ஒப்புக்கொண்டனர்” என்கிறார் அவர்.
”கணிசமான மக்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கலாம்இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.ஆனால், அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.”என்கிறார்
சர்ச்சைக்குரிய வரலாறு
இணைப்பு நடந்த உண்மையான தேதியும், ஆவணத்தில் யார் கையெழுத்திட்டது என்பதும் இன்றும் விவாகத்திற்கு உள்ளாகி வருகிறது.
மகாராஜா ஹரிசிங் 1947 அக்டோபர் 26-ம் தேதி ஸ்ரீநகரில் இருந்து தப்பித்து சென்று, ஜம்முவில் உள்ள அவரது மாளிகையில் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என இந்தியா கூறுகிறது.
ஆனால், இந்திய பிரதமர் நேருவின் பிரதிநிதியான வி.பி மேனன், அக்டோபர் 27-ம் தேதியே ஜம்முவிற்கு வந்தடைந்தார்.
‘தற்காலிக இணைப்பு’ என கூறப்படுவது குறித்து பிறகு விவாதங்கள் எழுந்தன.
”காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான அதிகாரம் பெற்ற மகாராஜா, இது குறித்து மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலே ஒப்பந்தம் கையெழுத்தானது” என்கிறார் சித்திக் வாஹித்.
ஆனால், மகாராஜா உருவாக்கிய நாடாளுமன்றம் மூலம் மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்கிறார் பீம் சிங்.
“ஜம்மு காஷ்மீர் இணையாண்மையில், ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய மூன்றினை இந்தியாவிடம் ராஜா ஒப்படைத்தார்” என்கிறார் சித்திக்.
ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்ற மகாராஜா அதன்பிறகு திரும்பி வரவேயில்லை. ஜம்மு காஷ்மீரின் முதல் பிரதமராக ஷேக் அப்துல்லா பதவி ஏற்றார்.
1953-ல் ஷேக் அப்துல்லாவை தேசத்துரோக குற்றச்சாட்டில் நேரு சிறையிலடைத்தார்.
`காஷ்மீரின் சிங்கம்` பிரிவினைக்குச் சதி செய்தது என இந்தியா கூறியது.
அக்டோபர் 1947 -ல், இந்தியாவுடன் இணைவது என்ற தேர்வு தான் காஷ்மீருக்கு இருந்தது என ஸ்ரீநகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
“நாங்கள் எப்போதும் இந்தியாவின் பகுதியாக இருந்தது அல்ல என நான் நம்புகிறேன். நாங்கள் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க முடியாது” என்கிறார் முனைவர் மாணவரான டொயீபா பண்டிட்.
பாகிஸ்தானுடன் இணைவது என்ற ஒரே வழி மட்டுமே காஷ்மீருக்கு எஞ்சியிருந்த நிலையில், இந்தியா காஷ்மீரை மோசமாக நடத்தியதுடன், உடைந்த வாக்குறுதிகளைக் கொடுத்தது என்கிறார் சட்ட மாணவரான வாசிம் முஷ்டாக்.
ஆனால் வணிகத் துறை மாணவரான ஃபைசம் இஸ்லாம், இந்தியாவால் காஷ்மீரிகளை வென்றிருக்க முடியும் என்கிறார்.
“இந்தியா அதிகளவு காஷ்மீர் நல்ல நம்பிக்கையை வளர்க்க வேண்டும்” எனவும் அவர் கூறுகிறார்.
“யார் என்ன செய்தது அல்லது வரலாறோ ஒரு விஷயமே அல்ல. இந்தியா இந்த விஷயத்தைச் சரி செய்ய முயற்சித்தால், அதனால் சுலபமாக செய்ய முடியும்” என்கிறார் அவர்.