இரட்டை குடியுரிமை சர்ச்சை: ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் தகுதி நீக்கம்

நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன்: பர்னபி ஜாய்ஸ்

இரட்டை குடியுரிமை வைத்திருந்த ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்பட நான்கு பிற அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவாக ஜாய்ஸ் உள்பட மூன்று பேர் தாங்களது தற்போதைய பதவிகளிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்கள். மற்ற இருவரும் ஜூலை மாதமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.

ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு சட்டப்படி, இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது.

கடந்த ஆகஸ்ட் மாதம் துணை பிரதமர் பர்னபி தனது நியூஸிலாந்து குடியுரிமையை திருப்பியளித்துவிட்டார். ஆஸ்திரேலியாவின் கீழவையில் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் அவர் அவர் கூறியிருந்தார்.

துணை பிரதமர் ஜாய்ஸின் இந்த வெளியேற்றம், ஒரே ஒரு இடம் மட்டுமே பெரும்பான்மை பெற்றிருக்கும் அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இடைத் தேர்தலில் ஜாய்ஸ் மீண்டும் போட்டியிடமுடியும்.

நீதிமன்ற உத்தரவு வெளியானதையடுத்து, ”நீதிமன்றத் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று உடனடியாக ஜாய்ஸ் தெரிவித்திருந்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து இரட்டை குடியுரிமை தொடர்பான சர்ச்சையில் ஆஸ்திரேலிய நாட்டு அரசியல் சிக்கி, டஜன் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய குடியுரிமை நிலையை பொதுவெளியில் வெளிப்படையாக தெளிவுப்படுத்த நேரிட்டது.