டெல்லியில் இருந்து சுயேச்சையாக எழுதிவரும் பத்திரிகையாளர் வினோத் வர்மாவை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் கைது செய்தது சட்டீஸ்கர் மாநில போலீஸ்.
இவர் ஏற்கெனவே பிபிசி இந்தி சேவையிலும், இந்தி நாளேடான அமர் உஜாலாவிலும் பணியாற்றியவர்.
டெல்லி காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் பந்த்ரி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அவரைக் கைது செய்து முதலில் டெல்லியில் உள்ள இந்திரபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார் பிபிசி செய்தியாளர் சரோஜ் சிங்.
அவரது வீட்டில் இருந்து 500 சிடிக்களை கைப்பற்றியதாக போலீஸ் தகவல்கள் கூறுகின்றன.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 384, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில சமூகப் பிரச்சினைகள் குறித்து வினோத் வர்மா நீண்ட காலமாக எழுதி வந்தார்.
அவர் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகெலின் உறவினர் என்று கூறுகிறார் ராய்பூரைச் செய்தியாளர் அலோக் புதுல்.
“வினோத் வர்மா எழுதும் செய்திகள் அரசுக்கு ஆத்திரமூட்டியதாகவும், இந்தக் கைது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்றும்,” பூபேஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
“இது பத்திரிகை உரிமையை ஒடுக்கும் செயல், இதை சகித்துக் கொள்ள முடியாது,” என்று கூறியுள்ளார் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) அமைப்பின் சத்தீஸ்கர் மாநிலப் பிரிவின் தலைவர் லக்கன் சிங். மூத்த பத்திரிகையாளர்கள் பலர் இந்தக் கைதை கண்டித்துள்ளனர்.