அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்.
எனினும் தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இக் கொலை தொடர்பான இன்னும் சில ரகசியக் கோப்புகளை சாதாரணக் கோப்புகளாக வகை மாற்றம் செய்து விடுவிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.
தேசிய ஆவணக் காப்பகத்தால் பகிரத்தக்கதாக மாற்றப்பட்டுள்ள கோப்புகளில் இருப்பது என்ன என்பது பற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அலுவலர்கள் தெரிவிக்கவில்லை. 54 ஆண்டுகளுக்கு முன்பு டெக்சஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது முதல் அவரது கொலைக்கான நோக்கம் தொடர்பாக பல சதிக் கோட்பாடுகள் வலம் வந்தபடி உள்ளன.
இந்தக் கொலை தொடர்பான விசாரணையின் சுமார் 50 லட்சம் பக்க ஆவணங்கள் முழுவதையும் 25 ஆண்டுகளில் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் 1992ல் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டப்படி, எல்லா ஆவணங்களையும் வெளியிடுவதற்கான காலக்கெடு வியாழக்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இந்த ஆவணங்களில் இன்னும் வெளியிடப்படாமல் இருந்தவற்றில் பெரும்பாலானதை டிரம்ப் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாகவே, சுமார் 90 சதவீத ஆவணங்கள் வெளியிடப்பட்டுவிட்டன.
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., புலனாய்வு நிறுவனமான எஃப். பி.ஐ. வெளியுறவுத் துறை உள்ளிட்ட நிறுவனங்கள் கடைசி நிமிடத்தில் மேற்கொண்ட முயற்சிகளால் இந்தக் கொலை தொடர்பான கோப்புகளில் சில வெளியிடப்படவில்லை. எனினும், அரசு மூடி மறைக்க முயல்வதான குற்றச்சாட்டுகள் குறையப்போவதில்லை.
தேசியப்பாதுகாப்புக்கு சரி செய்ய முடியாத பாதிப்ப ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படும் கோப்புகளை நிறுத்திவைக்கவேண்டும் என்ற முடிவை ஏற்றுக்கொள்வதைத் தவிர என்னால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்று டிரம்ப் டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
1963 நவம்பர் 22-ம் தேதி டல்லாசில் மேற்கூரையில்லாத கார் ஒன்றில் பயணித்தபோது கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் காரில் இருந்த டெக்சஸ் மாகாண ஆளுநர் ஜான் கொன்னாலி காயமடைந்தார். காவல்துறை அதிகாரி ஜெ.டி.டிப்பிட்டும் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட லீ ஹார்வீ ஆஸ்வால்டு என்பவர் போலீஸ் அலுவலகத்தில் இரவு விடுதி உரிமையாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.