குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறிய கருத்தால் பாஜக தலைவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
கர்நாடகா மாநிலத்தில் மன்னர் திப்பு சுல்தான் ஜெயந்தி நவம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது.
ஆனால், திப்பு சுல்தான் இந்துக்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் எதிரானவர் என்று பாஜகவினர் கூறிவருகின்றனர்.
அதனோடு, திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை கொண்டாடினால் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டசபை கட்டடத்தின் வைர விழா கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், “திப்பு சுல்தான் பிரிட்டிசாரை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்தவர்”.
போரில் நவீன சாதனங்களை பயன்படுத்துவதில் அவர் சிறந்து விளங்கினார் என்று புகழாரம் சூட்டினார்.
குடியரசு தலைவரின் இந்த பேச்சு பாஜக தலைவர்களை கோபம் அடைய செய்துள்ளது.
ஏற்கனவே, திப்பு சுல்தான் விழாவுக்கான அழைப்பிதழில், தன்னுடைய பெயரை கூட சேர்க்க வேண்டாம் என்று, மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கர்நாடக மாநில அரசுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திப்பு சுல்தானை புகழ்ந்து பேசியிருப்பது பாஜகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.