கைதடி அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட வயோதிப பெண்ணை மறுநாளே உறவினர்கள் வந்து அழைத்துச்சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் உணர்வுபூர்வமாகப் பாராட்டப்பட வேண்டியது என்று இல்ல அத்தியட்சகர் த .கிருபாகரன் தெரிவித்தார்.
சம்பவம் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த 88 வயது மூதாட்டியே அவரின் உரித்துடைய உறவினர்களால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சம்பந்தப்படட வயோதிப பெண் உறவுகளை நினைந்து ஒருநாள் முழுவதும் உணவின்றி அழுதவாறு இருந்தார் என்று கூறப்படுகிறது.
அவரை முதியோர் இல்லத்தில் இணைத்துவிட்டுச் சென்ற உறவுகளும் பாட்டியை தனித்து விட்டுவிட்டோமே என்று பின்னரே உணர்ந்து வீட்டிலிருந்து கவலைப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனால் மறுநாள் அவர்கள் கைதடி இல்லத்துக்குச் சென்று
குறித்த முதுமைப் பெண்ணை தாமே வீட்டில் வைத்து பராமரிப்பதாகக்
கூறி அழைத்து சென்றனர்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் வயோதிபர் இல்லத்தில் இதுவரை காலமும் இடம்பெறவில்லை.
சமூகத்தில் மூத்தவர்களைப் பராமரித்துப் பாதுகாப்பது அவர்களது உறவுகளின்கடமை என்பதை இந்தச் சம்பவம் உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டுவதாக அத்தியட்சகர் கிருபாகரன் மேலும் தெரிவித்தார்.