ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 9 பெண்கள் சேர்ந்து ஒடிசாவின் ராயகடா மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றனர்.
நேற்று முன்தினம் அங்குள்ள நாகபலி ஆற்றில் கட்டப்பட்டு இருந்த தொங்கு பாலத்துக்கு சென்ற அவர்கள் அங்கேயே நின்றவாறு பல்வேறு புகைப்படங்களை எடுத்தனர்.
பின்னர் ஆற்றின் நடுவில் இருந்த பாறையில் நின்றுகொண்டு அவர்கள் செல்பி புகைப்படம் எடுத்தனர். அப்போது ஜோதி (வயது 27), ஸ்ரீதேவி (23) ஆகிய 2 இளம்பெண்கள் எதிர்பாராதவிதமாக கால்தவறி ஆற்றுக்குள் விழுந்தனர். இதில் வெள்ளத்தில் மூழ்கி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இளம்பெண்களின் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.