நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேலை மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான கடும் மழை பெய்யக் கூடும் என திணைக்களத்தின் அதிகாரி ஜானக குமார தெரிவித்துள்ளார்.
அதிக மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட அரைக் கோளத்தில் இருந்தும் தென் அரைகோளத்தில் இருந்து வரும் காற்று சந்திக்கும் தாழமுக்க பிரதேசம் இலங்கைக்கு அருகில் இருப்பதால் இந்தக் காலநிலை ஏற்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடமாகாணத்திலும் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலை நேரங்களிலும் மழை பெய்யலாம். குறிப்பாக மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும்.
இதேவேளை, பொலனறுவை – வெலிகந்த பிரதேசத்தின் கிராமம் ஒன்றில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் 18 வீடுகள் சேதமடைந்துள்ளது.
அத்துடன் அரலங்வில – அழுத்வெவ பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த 19 வயது இளைஞன் மீது மின்னல் தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.