வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது.
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் கடந்த 2011 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் பதிவாகியது.
இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் செய்துகொள்வார் என காத்திருந்த சிறுமிக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார் என. இந்நிலையில் சிறுமி விடயம் குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய குறித்த இளைஞனை கைது செய்த முல்லைத்தீவு காவற்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியாமேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தநிலையில், சாட்சியங்கள் மன்றினால் பரிசீலிக்கப்பட்டு இன்றைய தினம் (27)நீதவான் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் பிறந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் மேலும், 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும்,தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவை செலுத்துமாறும் தை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை, அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.