பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு நாளை மாலை 6 மணியளவில், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலகத்தில் கூடவுள்ளது.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், கடந்த 19ஆம், 20ஆம் நாள்களில் நடத்தப்படவிருந்தது.

எனினும், நாடாளுமன்றக் குழுவைக் கூட்டுவதற்கு முன்பாக, ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எவ் வலியுறுத்தியிருந்தது.

அதேவேளை, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்புடனான சந்திப்புகள் மற்றும் அரசியலமைப்பு தொடர்பான சந்திப்புகளால், கடந்த 19ஆம் , 20ஆம் நாள்களில் நடைபெறவிருந்த, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையிலேயே, நாளை மாலை 6 மணியளவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகளும் பங்கேற்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

வழிநடத்தல் குழுவின் அறிக்கை தொடர்பாக தமிழ் அரசுக் கட்சி சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில், ரெலோ, புளொட் ஆகியன பெரிதாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் இருக்கின்றன.

எனினும், ஈபிஆர்எல்எவ் இந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில், நாளைய கூட்டத்தில், காரசாரமான விவாதங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNA-meeting-02