அ.தி.மு.கவிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்து இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதால் அதிமுக சின்னம் முடக்கப்பட்டது. அந்த வழக்கு இன்னும் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இலையைத்தான் முடக்கிவிட்டார். எப்படியேனும் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் விவகாரத்தில் வென்றே தீருவேன் என்ற எண்ணத்தில் டி.டி.வி.தினகரன் வென்றுவிட்டார்.
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை ஓ.பி.எஸ் எடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த டி.டி.வி.தினகரன், தனது ஆதரவாளர்களை அனுப்பிவைத்து ஓ.பி.எஸ்ஸிற்கு கிடைக்காமல் தடுத்துவிட்டார். முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகிய இருதரப்புக்கும் தராமல், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் அவரது சிலைக்கு ஆண்டு தோறும் 13 கிலோ தங்க கவசம் அணிவிக்கப்படும்.
இந்த நிலையில், வரும் 30ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தேவர் ஜெயந்தி விழாவிற்காக மதுரை வங்கியிலுள்ள முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கும் தங்க கவசத்தை பெறுவதற்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வங்கிக்கு இன்று காலை சென்றனர்.
மேலும் அந்த தங்க கவசத்தை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பெற்று கொள்வார் என்று கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸும் அங்கு சென்றார். அதே நேரத்தில், அ.தி.மு.கவின் மற்றொரு அணியான டி.டி.வி.தினகரன் தரப்பினர், முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெறுவதற்காக அங்கு சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதன் காரணமாக தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று புரியாமல் வங்கி நிர்வாகத்திற்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. அரசியல் ரீதியாக பார்த்ததால், ஆளுங்கட்சியினரிடம் தான் வசம் ஒப்படைக்க வேண்டும். அதே நேரத்தில் ஜாதி அடிப்படையில் பார்த்தால், மற்றொரு தரப்பினருக்கு தரவேண்டும். ஆனால், இரண்டு தரப்பினரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இதனால், வங்கி நிர்வாகம் யாரிடம் தங்க கவசத்தை கொடுப்பது என்று திகைத்தது.
அதனையடுத்து நீண்ட நேர இழுப்பறிக்கு பின், முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை, மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. மேலும், விழா நடைபெறும் இடத்திற்கு அரசு அதிகாரிகள் கொண்டு சென்று, தங்க கவசத்தை அமைப்பார்கள். தேவர் ஜெயந்தி விழா முடியும் வரை பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதன்பின்னர், மீண்டும் மாவட்ட நிர்வாகம், தேவர் தங்க கவசத்தை பெற்று வந்து, வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இதனையடுத்து இருதரப்பினரிடமும் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தங்க கவசத்தை ஓ.பி.எஸ் பெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தினகரன் தற்போது ஜெயித்துக் காட்டிவிட்டார். தனக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஓ.பி.எஸ் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தை சாதித்துக் காட்டிவிட்டார் தினகரன்.