சிறிலங்காவில் இலத்திரனியல் ‘ஸ்மார்ட்’ தேசிய அடையாள அட்டை விநியோகம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தினார்.
சிறிலங்காவில் தற்போதுள்ள தேசிய அடையாள அட்டைக்கு மாற்றாக, இந்தப் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அடுத்து ஆண்டு, தற்போதுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளையும், இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளாக மாற்ற, சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையில்லை.
தேசிய அடையாள அட்டை நல்ல நிலையில் இருந்தால் புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் அடையாள அட்டைக்கான சட்டஒழுங்குகள் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பின்னர், தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டையை முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
புதிய இலத்திரனியல் அடையாள அட்டை 12 இலக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.
அனைத்துலக சிவில் விமான சேவை அமைப்பின் தரத்திற்கு அமைவான படம் மற்றும் இயந்திரத்தினால் வாசிக்கக் கூடிய பார்குறியீடு என்பவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெயர், பிறந்த இடம், முகவரி மற்றும் பாலினம் போன்றன மும்மொழிகளிலும் இதில் அச்சிடப்பட்டுள்ளது. அடையாள அட்டையின் உரிமையாளரின் கையொப்பமும் இந்த அடையாள அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.