கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து நேரடி ஆட்சியை அறிவித்தார் ஸ்பெயின் பிரதமர்

கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து நேரடி ஆட்சியை அறிவித்தார் ஸ்பெயின் பிரதமர்

மாட்ரிட்:

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கட்டலோனியா, தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கேட்டலோனியா பாராளுமன்றத்தில் பேசிய கார்லஸ் பூஜ்டியமோன்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க்கொள்வதாக அறிவித்தார். இருப்பினும் தனிநாடு குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. ஸ்பெயின் அரசு உடன் பேசி முடிவெடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

கார்லஸ் பூஜ்டியமோன்ட் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்காத சூழ்நிலையில், கட்டலோனியா அரசை சஸ்பெண்ட் செய்து விட்டு அங்கு நேரடி ஆட்சியை கொண்டு வர ஸ்பெயின் தீர்மானித்தது.

இந்நிலையில், ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கட்டலோனியா பாராளுமன்றம் நேற்று அறிவித்தது. இதையடுத்து ஸ்பெயின் அரசு கேபினட் கூட்டத்தை அவசரமாக கூட்டியது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு கட்டலோனியா பிரிவினைவாத இயக்கத்தை தடைசெய்ய கேபினட் ஒப்புதல் அளித்ததன் மூலம் அம்மாகாணம் ஸ்பெயினின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கு டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஸ்பெயின் பிரதம மந்திரி மரியானோ ராஜோய் அறிவித்தார்.

கட்டலோனியா பிரிவினைவாத தலைவர் சார்லஸ் பியுக்டிமாண்ட மற்றும் அவருடைய அனைத்து ஆதரவாளர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ராஜோய் கூறினார்.