ஐந்து மாதங்களாக பசிபிக் கடலில் தனித்து விடப்பட்ட ஹவாய் பெண்கள் இருவரை அமெரிக்க கடற்படை மீட்டுள்ளது.
ஜெனிஃபர் அப்பல், டாஷா ஃபுயாவா என்ற இரண்டு பெண்களும் கடல் வழியாகப் பயணம் செய்து தாஹித்தி என்ற பகுதிக்குச் சென்றடையத் திட்டமிட்டனர். இரண்டு மாதங்களில் கரை சேர்ந்து விடலாம் என்று கணக்கிட்டு தமது உறவினர்களுக்கும் அதுபற்றி அறிவித்திருந்தனர்.
அதன்படி, கடந்த மே மாதம் மூன்றாம் திகதி ஹவாயில் இருந்து தமது வளர்ப்புப் பிராணிகளான இரண்டு நாய்களுடன் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் திட்டமிட்டதற்கு எதிராகவே அனைத்தும் நடந்தன.
புறப்பட்ட முதல் நாளே ஜெனிஃபரின் கைபேசி கைதவறிக் கடலில் விழுந்து மூழ்கியது.
மே மாதம் முப்பதாம் திகதி சீரற்ற காலநிலையால் கடல் நீர் புகுந்ததில், கப்பலின் என்ஜின் பழுதானது. கப்பலின் உச்சிக் கோபுரமும் சேதமடைந்தது. இதனால் தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டது. வேறு வழியின்றி துடுப்பால் வலித்துப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அவர்களது படகின் என்ஜின் பழுதான கடல் பகுதி சுறா மீன்களுக்குப் பிரசித்தி பெற்றது. வீட்டுக்கே தேடி வந்த விருந்தாக சுறாக்கள் இவர்களது படகை அடிக்கடி தாக்கின. எனினும், தெய்வாதீனமாக அவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அபாய சமிக்ஞைகளை எழுப்பியும் அனுப்பியும் எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை.
தண்ணீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் இரண்டைக் கொண்டு சென்றிருந்தபோதும், அவையும் திடீரெனச் செயலிழந்தன.
அவர்கள் பயணம் செய்த படகில் சில பழுதுகள் இருந்தன. அவை பற்றித் தெரிந்தே அந்தப் படகை அவர்கள் வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். முன்கூட்டியே படகின் பிரச்சினை தெரிந்திருந்ததால், சுமார் ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுகளைப் படகில் களஞ்சியப்படுத்தியிருந்தனர்.
குறிப்பிட்ட தினத்தில் அவர்கள் வந்து சேராததால் அவர்களது உறவினர்கள் கடற்படையில் புகாரளித்திருந்தனர். எனினும் கடற்படையின் தேடலிலும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான், ஜப்பானியக் கடற்பிராந்தியத்தில் சென்றுகொண்டிருந்த மீன்பிடிப் படகொன்று இவர்களின் படகைக் கண்டது. உடனடியாக இத்தகவல் அமெரிக்க கடற்படைக்கு அறிவிக்கப்பட்டது. சட்டவிரோதிகளின் படகாக இருக்கக் கூடும் என்று விரைந்து சென்று பார்த்தபோதுதான், அவர்கள் ஐந்து மாதங்களாக நடுக்கடலில் காணாமல் போயிருந்தவர்கள் என்று கடற்படையினருக்குத் தெரியவந்தது.
மீட்கப்பட்டுள்ள இரண்டு பெண்களும், கடற்படைக் கப்பல் கரை சேர்ந்ததும் தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.