இந்த நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வட்டகொடை, மெதகும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு, அதனை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ம.ராமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய அரசியல் யாப்பில் நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கை பிரிப்பதோ அல்லது பௌத்த சமயத்தை முன்நிறுத்துவதோ போன்ற எந்த நடவடிக்கையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவில்லை.
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒருமித்த சமாதான வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும். இதற்கமைவாகவே அரசியல் யாப்பு அமைய வேண்டும். இதற்கு அப்பால் அரசியல் யாப்பு அமையுமானால் நாம் இந்த அரசியல் யாப்புக்கு எதிராக வாக்களிக்கவும் தயாராக இருக்கின்றோம்.
இதனால் எமக்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. அதேவேளையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஆழமாக சிந்தித்து நாம் செயல்பட்டு வருகின்றோம். 1983ஆம் ஆண்டு கலவரம்போல் ஆகிவிடக்கூடாது என்பதை நாம் உற்று நோக்குகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்குகின்றது. புதிதாக ஒன்றிணைந்த எதிரணி களம் இறங்குகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சார்ந்தவர்களே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பாரியளவில் வெற்றியை அடைவதற்கு ஒன்றிணைந்த எதிரணியையும் இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிலளித்தார்.
மேலும், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது,
சௌமிய மூர்த்தி தொண்டமான் மலையக மக்கள் மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் போற்றப்பட்டு வந்தவர். அவரின் பெயரை அழிப்பதன் மூலம் மக்கள் மனதில் இருக்கும் அவருடைய நம்பிக்கையை அழிக்க முடியாது.
இவ்வாறான விடயங்களை செய்வதை தவிர்த்து தாங்கள் புதிதாக உருவாக்கி பெயர் இடுவது நல்லது என்று நான் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.