அமெரிக்காவிற்கு சொந்தமான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமான போக்குவரத்து கப்பல் உள்ளிட்ட சில போர்க்கப்பல்கள் இன்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
1985 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் விமான போக்குவரத்துக் கப்பல், இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், யு.எஸ்.எஸ். பிரின்ஸ்டன். யு எஸ் எஸ். ஹொவாட், யு .எஸ் எஸ் ஷவூப், யு.எஸ்.எஸ் பிரின்க்னே, யு.எஸ்.எஸ் கிட்ஸ் ஆகிய போர்க்கப்பல்களே இலங்கையை வந்தடைந்துள்ளன.
இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையிலான நல்லுறவினை வௌிப்படுத்தும் நோக்கில் போர்க்கப்பல்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளன.
23 மாடிகளை கொண்ட நிமிட்ஸ் கப்பல், 333 மீட்டர் நீளமுடையதாகும்.
5,000 பேர் தங்குவதற்கான வசதிகளை இந்தக் கப்பலில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த கப்பலில் உள்ள சமையல் அறையில் தினமும் 18,000 பேருக்கான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
நாட்டை வந்தடைந்த நிமிட்ஸ் கப்பலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை இலங்கையில் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், அமெரிக்க கடற்படையினர் நாட்டிற்கு வருகை தந்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அமெரிக்க கடற்படையினர் அறிந்து கொள்ள முடியும் என்பதுடன், இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினரை சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமெரிக்க போர்க்கப்பல்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் அமெரிக்க கடற்படையினர் வைத்தியசாலைகள், கருணை இல்லங்கள் உள்ளிட்ட சில இடங்களில் சமூகப் பணியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.