திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வசித்து வந்த தம்பதியர், தங்களின் இரட்டைக் குழந்தைகளோடு, வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் சரவணன். இவரது மனைவி சுதா. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு விவிஷா மற்றும் விவிதா என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது அவிநாசி வட்டத்தில் உள்ள குருந்தாங்காடு எனும் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் இக்குடும்பம் வசித்து வந்தது. அரசுப் பள்ளியில் ஆசிரியராக சுதா பணியாற்றி வந்த நிலையில், அவரது கணவர் சரவணனுக்குச் சரியான தொழில் வாய்ப்பு அமையவில்லை. ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட சில தொழில்களை முயற்சி செய்தும், சரவணனுக்கு முறையான வருமானம் இல்லாமல்போனதால், கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ட வண்ணம் இருந்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு, நேற்றைய தினம் அவிநாசி திரும்பிய இத்தம்பதியர், வழக்கம்போல நேற்று இரவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது தன்னுடைய சகோதரியின் மொபைல் எண்ணுக்குத் தொடர்புகொண்ட சுதா, கணவருடனான பிரச்னை குறித்து தெரிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலை நேரில் வந்து பார்ப்பதாக சுதாவின் சகோதரியும் பதிலளித்திருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை வெகுநேரம் சுதாவின் வீடு திறக்கப்படாமல் பூட்டியிருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அந்த வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தம்பதியர் இருவரும் தங்களின் 11 மாத இரட்டைக் குழந்தைகளோடு சேர்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.