சைட்டம் விவகாரத்துக்கான தீர்வு ஒன்று பெறப்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. உண்ணாவிரதத்துக்கான திகதி இன்று தீர்மானிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (28) நடைபெற்றது. இதில், சைட்டம் விவகாரம் குறித்து போலியான தீர்வு ஒன்றையே அரசு தற்போது கையிலெடுத்திருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
“சைட்டம் மருத்துவக் கல்லூரியை சைட்டம் தகவல் தொழில்நுட்ப நிறுவகத்துடன் இணைக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் அது மருத்துவக் கல்லூரியாகவே இயக்கவுள்ளதாகவும் அரசு முடிவெடுத்திருப்பதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. எனினும் இவ்வாறானதொரு தீர்வை நாம் எதிர்க்கிறோம். தகவல் தொழில்நுட்ப நிறுவகத்துடன் சைட்டம் மருத்துவக் கல்லூரியை இணைப்பதற்கும் நாம் சம்மதிக்க மாட்டோம்” என, மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.