மீண்டும் ஒரு ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனைக்கு முயற்சிக்க வேண்டாம், அது பாரிய பேரழிவை இரு நாட்டுக்கும் ஏற்படுத்தும் என வடகொரியாவை சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை மேர்கொண்டுவரும் Punggye-ri பகுதியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இனியொரு சோதனைக்கு அப்பகுதி தாக்குப்பிடிக்க வாய்ப்பில்லை என சீனாவின் முக்கிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மன்டாப் மலை வெடித்துச் சிதறும் எனில் 50 மைல் தொலைவில் இருக்கும் சீனா வரை அணுக்கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளதாகவும், கடைசியாக வடகொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனை காரணமாக ஆபத்தின் வீரியம் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இருதினங்களுக்கு முன்னர் வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் Ri Yong-ho ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், பசுபிக் பெருங்கடலின் மீதே ஹைட்ரஜன் அணு குண்டு சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஜிம் மெட்டீஸ்,
சியோலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்கா மீதோ அல்லது அதன் நட்பு நாடுகள் மீதோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் தோற்கடிக்கப்படும் என்றார்.
வடகொரியா அதன் அணுஆயுதங்களை பயன்படுத்த நினைத்தால், அது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை சந்திக்க தயாராக இருக்கவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மட்டுமின்றி உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் எனவும் ஜிம் மெட்டீஸ் அப்போது தெரிவித்துள்ளார்.
தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் எதிர்ப்பு நிலையை கைக்கொள்ள முடிவெடுத்திருப்பது கிம் ஜோங் அரசை தனிமைப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.