அரியாலையில் இளைஞன் சுட்டுக்கொலை தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம்!

யாழ்ப்பாணம், அரியாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை இடைநிறுத்துமாறு கொழும்பு பொலிஸ் தலையகத்திலிருந்து பணிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 நாள்களாக முன்னெடுத்த தீவிர விசாரணைகளால் சந்தேக நபர்களை நெருங்கிவிட்ட நிலையிலேயே இந்தப் பணிப்புரையை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படை முகாமை சோதனையிட நீதிமன்ற அனுமதியை பொலிஸார் நேற்றுமுன்தினம் பெற்றிருந்தபோதும், திடீரென அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தனர்.

இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையும் பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ளதால் அந்த முகாமில் விசாரணைகளை நடத்தி சந்தேகநபர்கள் இருப்பின் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்ட குழுவினரே யாழ்ப்பாணம் வந்து விசாரணைகளை முன்னெடுப்பர் எனத் தெரியவருகிறது.

images (88)